நெல்லையில் மீண்டும் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டதால் பரபரப்பு.

அரசியல் ஆரோக்கியம் இந்தியா இயற்க்கை சிறப்பு சுற்றுச் சூழல் செய்திகள் தமிழ்நாடு மருத்துவம்

திருநெல்வேலியில் தேசிய நெடுஞ்சாலை அருகே மீண்டும் மருத்துவ கழிவுகள் வீணாக கிடப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முக்கூடல் மற்றும் சுத்தமல்லி போன்ற திருநெல்வேலியின் புறநகர் பகுதிகளில் கேரளாவிலிருந்து கொண்டு வரப்பட்ட மருத்துவ கழிவுகள் கடந்த சில வாரங்களில் பரபரப்பை உருவாக்கியிருந்தன. இந்த விவகாரம் தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயம் விசாரணை நடத்தி, மருத்துவ கழிவுகளை கேரள அரசு முழுமையாக அகற்ற வேண்டும் என உத்தரவிட்டது. இதற்குப் பிறகு, லாரிகள் மூலம் மருத்துவ கழிவுகள் அகற்றப்பட்டன. இந்த சம்பவத்திற்கான விசாரணையில் போலீசார் வழக்கு பதிவு செய்து, 5-க்கும் மேற்பட்ட நபர்களை கைது செய்தனர். இந்நிலையில், திருநெல்வேலி அருகிலுள்ள ரெட்டியார்பட்டியில் மதுரை – கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையின் அருகில் மருத்துவ கழிவுகள் வீணாக கிடந்தது தெரியவந்துள்ளது. காலாவதியான மாத்திரைகள், டானிக் போன்றவை அங்கு அதிகமாக காணப்பட்டன. மேலும், அந்த மருத்துவ கழிவுகளை தீயிட்டு எரிக்க முயற்சித்துள்ளனர், ஆனால் அதில் பாதி அளவுக்கு மட்டுமே கழிவுகள் எரிந்துள்ளன. மருத்துவ கழிவுகளை சுகாதாரத்துறை வழங்கிய வழிகாட்டுதலுக்கு ஏற்ப முறையாக அகற்ற வேண்டும். பொதுமக்கள் இடங்களில் கழிவுகளை கொட்டக்கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், திருநெல்வேலி அருகே மீண்டும் மருத்துவ கழிவுகள் வீணாக கிடப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும் மற்றும் அதை கொட்டியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *