போர் நீடித்தால் 4.5 கோடி பேர் பட்டினி அபாயம்: ஐநா எச்சரிக்கை, பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என ஈரான் பதில்.

அரசியல் உலகம் சிறப்பு செய்திகள் போர் முதன்மை செய்தி

மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றம் மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மீது கடும் நிலைப்பாடு எடுத்துள்ள ஈரான், “அவர்கள் மண்டியிடும் வரை போரை நிறுத்த பேச்சுவார்த்தைக்கே இடமில்லை” என்று உறுதியாக தெரிவித்துள்ளது. ஈரானின் உச்சத் தலைவராக புதிய பொறுப்பேற்ற மொஜ்தாப் காமேனி, போர் நிறுத்தம் அல்லது பதற்றத்தை குறைக்கும் முயற்சிகளை ஏற்க முடியாது என்று கூறியுள்ளார். சமீபத்தில் ஈரானின் தேசிய பாதுகாப்பு குழு செயலர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்ததைத் தொடர்ந்து இந்த பதற்றம் அதிகரித்துள்ளது. பல நாடுகள் அமைதிக்கான பேச்சுவார்த்தையை முன்மொழிந்தாலும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தோல்வியை ஒப்புக்கொண்டு இழப்பீடு வழங்கும் வரை போர் தொடரும் என ஈரான் அரசு தெளிவுபடுத்தியுள்ளது.இந்த சூழ்நிலையில், உலகளாவிய அளவில் பெரும் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் இருப்பதாக ஐ.நா. எச்சரித்துள்ளது. ஐ.நா. அதிகாரி கார்ல் ஸ்காவு கூறுகையில், இந்த போர் ஜூன் மாதம் வரை நீடித்தால், உலகம் முழுவதும் மேலும் 4.5 கோடி மக்கள் கடுமையான பட்டினிக்கு ஆளாகும் அபாயம் இருப்பதாக தெரிவித்துள்ளார். ஏற்கனவே சுமார் 31.9 கோடி மக்கள் உணவுக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த போர் காரணமாக உணவு பொருட்களின் விலை உயர்வு, விநியோக தடை போன்றவை அதிகரித்து வருகிறது. குறிப்பாக எண்ணெய் விலை உயர்வு, வர்த்தக பாதைகள் பாதிப்பு, அவசர உதவி பொருட்கள் அனுப்புவதில் தாமதம் போன்றவை உலக பொருளாதாரத்தையும் உணவு பாதுகாப்பையும் கடுமையாக பாதிக்கும் நிலையில் உள்ளன. இதனால், இந்த போர் விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என்ற கோரிக்கை சர்வதேச அளவில் அதிகரித்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *