இந்தியாவை சேர்ந்த விமான நிறுவனங்கள் பாகிஸ்தான் வான்வெளியை உபயோகிக்க கூடாது என பாகிஸ்தான் அறிவித்துள்ள நிலையில், ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ நிறுவனங்களின் விமானங்கள் மாற்றுப்பாதையில் இந்தியா வந்தடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பகல்ஹாம் தீவிரவாத தாக்குதலை கண்டித்து பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வரும் நிலையில், தங்களது வான்வெளி பகுதியில் இந்திய விமான நிறுவனங்களின் விமானங்கள் செல்லக்கூடாது என பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இது குறித்து ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ ஆகிய விமான நிறுவனங்கள் விளக்கமளித்துள்ளன.
ஏர் இந்தியா நிறுவனம் அளித்துள்ள விளக்கத்தில், “அமெரிக்கா, கனடா, மெக்சிகோ, இங்கிலாந்து மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இந்தியா வரும் விமானங்கள் மாற்று பாதையில் வரும்” எனவும், “இந்த தவிர்க்க முடியாத சூழ்நிலைக்காக பயணிகளிடம் வருத்தம் தெரிவிப்பதாகவும்” கூறியுள்ளது.
இதேபோல, இண்டிகோ நிறுவனமும் பாகிஸ்தானின் அறிவிப்பால் தங்களது விமானங்கள் தாமதமாக வந்து சேரும் என தெரிவித்துள்ளது. விமான பயணத்தின் தற்போதைய நிலையை மீண்டும் சரிபார்க்கவும் எனவும் உங்கள் விமானம் பாதிக்கப்பட்டு இருந்தால், மாற்று வழியை பரிசீலனை செய்யலாம் அல்லது இணையதளம் மூலம் கட்டணத்தை திரும்ப பெறலாம் என்றும் தெரிவித்துள்ளது.

