ஒடிசா கடல் பகுதியில் 7 லட்சம் ஆலிவ் ரிட்லி ஆமைகளை இந்திய கடலோர காவல் படை பாதுகாப்பாக காத்துள்ளது. இந்திய பெருங்கடல், பசிபிக் மற்றும் அட்லான்டிக் கடல் பகுதிகளில் வாழும் இந்த ஆமைகள் 2 அடி நீளம் மற்றும் 50 கிலோ எடையுடன் உள்ளன. இவை 200 மீட்டர் ஆழத்தில் கடலில் வாழ்கின்றன. ஆண்டுதோறும் டிசம்பர் முதல் ஜூன் வரை, இந்த ஆமைகள் முட்டையிடுவதற்காக கரைக்கு வருவதும், இந்தியாவின் ஒடிசா முதல் சென்னை வரை உள்ள கடற்கரை பகுதிகளில் அவை கரை ஒதுங்குவது வழக்கம்.இந்த நேரத்தில் விசைப் படகுகள் மோதுவதாலும், வலைகளில் சிக்குவதாலும், ஏராளமான ஆமைகள் உயிரிழக்கின்றன. கடற்கரை பகுதிகளில் இவை வேட்டையாடப்படுவதும் நடைபெறுகிறது. இதனைத் தடுக்கும் நோக்கில், இந்திய கடலோர காவல் படை 1980-களில் ‘ஆபரேஷன் ஆலிவியா’ என்ற திட்டத்தை தொடங்கியது. இதன் கீழ், முட்டையிட கரை ஒதுங்கும் ஆலிவ் ரிட்லி ஆமைகளை கடலோர பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாத்தனர்.2025-ம் ஆண்டில் ஒடிசாவின் ருஷிகுல்யா நதி முகத்துவாரத்தில் 7 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆலிவ் ரிட்லி ஆமைகள் முட்டையிட கரை ஒதுங்கியுள்ளன. அவற்றின் கூடு கட்டுவதற்கான தேவைகளை கடலோர காவல் படை வீரர்கள் ஏற்படுத்தியுள்ளனர். கடந்த சில மாதங்களில் மேற்கொண்ட தீவிர ரோந்து மற்றும் வான்வழி கண்காணிப்பின் மூலம் 7 லட்சம் ஆமைகள் பாதுகாக்கபட்டுள்ளன.

