எல்ஐசி நிறுவனம் தனது முகவர்களின் மூலம் பாலிசிகளை விற்பனை செய்வதில் கின்னஸ் சாதனை அடைந்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான LIC (இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம்) கின்னஸ் சாதனை அடைந்துள்ளது. 24 மணி நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான ஆயுள் காப்பீட்டுக் பாலிசிகளை விற்று கின்னஸ் உலக சாதனை படைத்து, அதன் மூலம் வரலாற்றுச் சாதனை படைத்ததாக எல்ஐசி நிறுவனம் தெரிவித்துள்ளது.ஜனவரி 20ஆம் தேதியன்று, இந்தியா முழுவதும் மொத்தமாக 452839 எல்ஐசி முகவர்கள் 5,88,107 ஆயுள் காப்பீட்டுக் பாலிசிகளை வெற்றிகரமாக முடித்து வெளியிட்டுள்ளனர். இந்த குறிப்பிடத்தக்க முயற்சி, ஆயுள் காப்பீட்டுத் துறையில் முகவர் உற்பத்தித்திறனுக்கான புதிய உலகளாவிய அளவுகோலை 24 மணி நேரத்திற்குள் அமைத்துள்ளது என்று எல்ஐசி நிறுவனம் கூறியுள்ளது. ஜனவரி 20ஆம் தேதியை ‘மேட் மில்லியன் டே’ ஆண்டு விழாவாக ஒவ்வொரு ஆண்டும் எல்ஐசி நிறுவனம் கொண்டாடி வருகிறது. அன்று ஒவ்வொரு முகவரும் குறைந்தபட்சம் ஒரு பாலிசியையாவது முடிக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் இந்த சாதனை குறித்த அறிவிப்பை வெளியிட்ட பிறகு அதன் தாக்கம் பங்குச் சந்தையில் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வாரத்தின் கடைசி வர்த்தக நாளில் எல்ஐசி நிறுவனத்தின் பங்கு லாபத்துடன் முடிந்தது குறிப்பிடதக்கது.

