இளம் வயதில் இரட்டை சதம் அடித்த இந்திய கேப்டன்கள் லிஸ்டில் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலியை பின்னுக்கு தள்ளி 2 ஆம் இடத்தை பிடித்துள்ளார் சுப்மன் கில்.
பர்மிங்ஹாமில் நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் இரட்டை சதம் அடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளார். இந்திய அணி முதல் நாள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 310 ரன்கள் எடுத்தது. ஜடேஜா 89 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இங்கிலாந்து இந்தியா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 85 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 310 ரன்கள் அடித்திருந்தது. கேப்டன் சுப்மன் கில் 114 ரன்களுடனும், ஜடேஜா 41 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜடேஜா 89 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து விளையாடிய சுப்மன் கில் இரட்டை சதம் அடித்து அசத்தினார்.
மேலும் SENA நாடுகள் என்று அழைக்கப்படும் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் இரட்டை சதம் விளாசிய முதல் ஆசிய கேப்டன் என்ற சாதனையையும் இவர் ஏற்படுத்தியுள்ளார்.

