உத்தரகாண்ட் மாநிலத்தில் இந்தியாவின் முதன்முறையாக பொது சிவில் சட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.

அரசியல் இந்தியா சிறப்பு செய்திகள் முதன்மை செய்தி

இந்தியாவில் முதன்முறையாக, இன்று முதல் உத்தராகண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் நடைமுறைக்கு வருகிறது. திருமணம், விவாகரத்து மற்றும் வாரிசு உரிமை போன்றவற்றில் ஒரே மாதிரியான சட்டத்தை பின்பற்றும் வகையில் இது அமலுக்கு வருகிறது. பாஜக 2022 தேர்தலில் இதற்கான வாக்குறுதிகளை அளித்திருந்த நிலையில், இன்று முதல் இந்த சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. உத்தரகாண்டில் பொது சிவில் சட்டத்தை செயல்படுத்துவதற்கான விதிமுறைகள் ஒப்புதல் பெற்றுள்ளன, மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கான பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளன. இச்சட்டம் இன்று ஜனவரி 27ம் தேதி திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வரும். இது சமூகத்தில் சமநிலையை ஏற்படுத்தி, குடிமக்களுக்கு சமமான உரிமைகள் மற்றும் பொறுப்புகளை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி முன்னெடுத்துள்ள மாபெரும் ‘வேள்வியில்’ எங்கள் மாநிலத்தின் பொது சிவில் சட்டம் ஒரு முக்கிய அங்கமாக இருப்பதாக முதல்வர் தாமி குறிப்பிட்டுள்ளார். உத்தரகாண்ட்டில் நடைமுறைக்கு வரும் பொது சிவில் சட்டத்தை முன்னணி மாதிரியாகக் கொண்டு, அஸ்ஸாம் உள்ளிட்ட பாஜக ஆளும் பல மாநிலங்கள் இதற்கான ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பொது சிவில் சட்டத்தின் முக்கிய அம்சங்கள்: உத்தரகாண்ட்டில் பழங்குடியினருக்கு தவிர மற்ற அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் கீழ், திருமணப் பதிவு மட்டுமல்லாமல், திருமணம் செய்யாமல் கூட்டு வாழும் நபர்களும் அரசிடம் முறையாக பதிவு செய்ய வேண்டும். இணையதளத்தின் மூலம் இந்த பதிவு செய்யலாம். விவாகரத்திற்கான காரணங்கள், மறுமணம் மற்றும் ஜீவனாம்சம் தொடர்பான பொதுவான விதிமுறைகளை உறுதிசெய்யும் இந்த சட்டம், பலதார மணம் மற்றும் ஹலாலா நடைமுறைகளை தடை செய்கிறது. பாலின சமத்துவத்தை முக்கியமாகக் கொண்ட இந்த சட்டம், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஒரே மாதிரியான குறைந்தபட்ச திருமண வயதையும், ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு சமமான சொத்துரிமையையும் உறுதி செய்கிறது. செல்லுபடியாகாத திருமணத்தில் பிறந்த குழந்தைகளை சட்டப்பூர்வ வாரிசாகக் கருதுவதற்கான வழிமுறைகளை உருவாக்குவதோடு, உயில் தயாரிப்பு நடைமுறைகளை எளிதாக்குவதற்கும் இந்த சட்டம் உதவுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *