மடப்புரம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் இன்று சிபிஐ டிஎஸ்பி மோஹித் குமார் விசாரணையை தொடங்கினார்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் தற்காலிக ஊழியர் அஜித்குமார் (27).
நகை திருட்டு வழக்கு தொடர்பான போலீஸ் விசாரணையின் போது உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிா்வலையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக 5 போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.சிவகங்கை மாவட்ட எஸ்.பி. ஆஷிஷ் ராவத் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றப்பட்டாா். மானாமதுரை காவல் துணைக் கண்காணிப்பாளா் சண்முகசுந்தரம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். இதையடுத்து, இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்படுவதாக முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். இதனிடையே, இந்த வழக்கை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் பெற்று உடனடியாக விசாரணையை தொடங்க வேண்டும். ஆக.20-க்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்ந்து வழக்கை விசாரிக்கும் விசாரணை அதிகாரியாக சிபிஐ டிஎஸ்பி மோஹித்குமார் நியமிக்கப்பட்டார். பின்னர், அஜித்குமார் மரணம் தொடர்பாக சிபிஐ தனி வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கியது. டிஎஸ்பி மோஹித் குமார் தலைமையிலான சிபிஐ அதிகாரிகள் இன்று காலை மதுரை சிபிஐ அலுவலகத்தில் விசாரணை தொடர்பாக ஆலோசனை நடத்தினர். சம்பவம் நடந்த கோயில் கோசலை, பார்கிங் இடம், திருப்புவனம் காவல் நிலையம் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். சிபிஐ டி.எஸ்.பி. மோஹித் குமார் தலைமையில் 6 பேர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

