டெல்லி: இந்தியாவில் இனி சுங்க கட்டணம் செலுத்துவதற்கும் வருடாந்திர பாஸ்களை வழங்குவதற்கும் மத்திய அரசு திட்டம் தீட்டியுள்ளது. தற்போது இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் சுங்கச்சாவடிகள் எல்லாம் பாஸ்டேக் முறையில் சுங்க கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.
சில இடங்களில் சுங்க கட்டணம் அதிகமாக இருப்பதாகவும் அருகருகிலேயே சுங்கச்சாவடிகள் இருப்பதாகவும் மக்கள் புகார் கூறி வருகின்றனர். இந்த நிலையில் மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சகம் அடிக்கடி சுங்கச்சாவடிகள் வழியே பயணம் செய்பவர்களுக்கும் வருடாந்திர பாஸ் திட்டத்தை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி தனிநபர் வாகன உரிமையாளர்கள் 3 ஆயிரம் ரூபாய் செலுத்தி விட்டு ஓராண்டுக்கான டோல் பாஸை பெற்றுக் கொள்ளலாம் .
அந்த குறிப்பிட்ட ஓராண்டு காலத்திற்குள் எத்தனை முறை வேண்டுமானாலும் நாட்டின் எந்த ஒரு சுங்கச்சாவடியிலும் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல கார் உரிமையாளர்கள் 15 ஆண்டு காலத்திற்கு என மொத்தமாக 30 ஆயிரம் ரூபாயை கட்டணமாக செலுத்திவிட்டு லைஃப் டைம் பாஸ் பெற்றுக் கொள்ளலாம் என்றும் சொல்லப்படுகிறது.
இந்தியாவில் சுங்கச்சாவடிகளில் 2023-24 ஆம் ஆண்டில் மட்டும் 55,000 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது. இதில் 8,000 கோடி ரூபாய் தனிநபர் வாகன உரிமையாளர்களிடமிருந்து வசூல் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்தியாவில் பாஸ்டேக் மூலம் நடக்கும் பரிவர்த்தனைகளில் 53 சதவீதம் தனிநபர் வாகனங்களில் தான் நடக்கிறது. ஆனால் இவ்வாறு வசூல் செய்யப்பட்ட மொத்த தொகையில் 21 சதவீதம் மட்டுமே தனி நபர் வாகனங்களில் இருந்து பெறப்படுகிறது.

