வாக்காளர் பட்டியல் முறைகேடு தொடர்பான விசாரணையை நடத்த வலியுறுத்தியும் , பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தை நோக்கி இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் பிரம்மாண்ட பேரணியை நடத்தினர். ராகுல் காந்தி தலைமையில் நடந்த இந்த பேரணியில் கலந்து கொண்ட மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தியை போலீசார் கைது செய்தனர். பிரியங்கா காந்தி, கேசி வேணுகோபால் உள்ளிட்ட இந்திய கூட்டணி எம்பிக்களையும் கைது செய்யப்பட்டனர். டெல்லியில் பேரணியை போலீசார் தடுத்ததால் சாலையில் அமர்ந்து எம்.பி.க்கள் போராட்டம் நடத்தியபோது கைது செய்யப்பட்டனர். சஞ்சய் ராவத், அகிலேஷ் யாதவ், சுப்ரியா சுலே, மஹிபூபா மொய்த்ரா உள்ளிட்ட எம்பிக்களும் கைது செய்யப்பட்டனர். கைது செய்து பேருந்தில் ஏற்றிய போதும் பேருந்துக்குள்ளும் எம்பிக்கள் முழக்கமிட்டு போராட்டம் நடத்தினர். இதில், 25 கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் பங்கேற்றனர். காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணமூல் காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, இடதுசாரிகள், ராஷ்ட்ரிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார் பிரிவு), சிவசேனா (யுபிடி) மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.க்கள் கலந்து கொண்டுள்ளனர். திமுக சார்பில் கனிமொழி எம்.பி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

