ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடானில் அதிகாரப் போட்டியின் ஒரு பகுதியாக ராணுவம் மற்றும் துணை ராணுவ படைகளுக்கு இடையே தொடங்கிய மோதல் போக்கு தற்போது பெரும் பிரச்னையாக வெடித்துள்ளது. கடந்த ஏப்ரல் 15−ம் தேதி முதல் சூடான் தலைநகர் கார்டூம் மற்றும் பிற பகுதிகளில் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது.
இந்த உள்நாட்டு போரின் காரணமாக ஏராளமான இந்தியர்கள் சூடானில் சிக்கியுள்ளனர். சூடானின் தலைநகர் கார்ட்டூமில் சண்டை அதிகரித்துள்ளதையடுத்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர். இதையடுத்து, சூடானில் இருக்கும் இந்தியர்கள் பாதுகாப்புடன் இருக்கும்படியும், தேவையின்றி வெளியே வரவேண்டாம் என்றும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியது.
சூடான் போர் நிலவரம் மற்றும் அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை பாதுகாப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் கடந்த 21ம் தேதி நடைபெற்றது. சூடானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க “ஆபரேசன் காவிரி” எனும் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. சூடானில் சிக்கியுள்ள 3,000 இந்தியர்களை மீட்க “ஆபரேசன் காவிரி” திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்திருந்தார்.
மேலும் சூடானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை வெளியேற்ற சவுதி அரேபியாவின் ஜித்தா நகரில் இரண்டு கனரக ராணுவ போக்குவரத்து விமானங்களும், சூடானில் உள்ள முக்கிய துறைமுகத்தில் ஒரு கடற்படை கப்பலையும் இந்தியா நிறுத்தி உள்ளதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்திருந்தார்.
சூடானின் பல்வேறு பகுதிகளில் வசித்து வந்த இந்தியர்கள் சுமார் 500 பேர் மீட்கப்பட்டு, சூடான் துறைமுகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அதன் பிறகு, இந்தியாவின் ஐ.என்.எஸ். கப்பல் உதவியுடன், சவுதி அரேபியாவின் ஜித்தா நகருக்கு இன்று அழைத்து வரப்பட்டனர். இந்த நிலையில் ஜித்தா விமான நிலையத்தில் இருந்து 360 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு வந்த முதல் விமானம், தலைநகர் டெல்லியை வந்தடைந்தது.
இதனிடைடுத்து சூடானில் இருந்து மீட்கப்பட்ட மேலும் 246 இந்தியர்கள், ஐ.என்.எஸ். கப்பல் மூலம் ஜித்தா நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கிருந்து இரண்டாவது இந்திய விமானப்படையின் “Globemaster- C17″ கனரக விமானத்தின் மூலம் இந்தியா அழைத்து வரப்பட்டனர். அவர்கள் வந்திறங்கிய போது இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்தனர். மேலும் இந்திய இராணுவ வீரர்கள் வாழ்க எனும் முழக்கங்களை எழுப்பினர்.
கிட்டத்தட்ட 1700 இந்தியர்கள் தாக்குதல் நடைபெறும் பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், 3400 இந்தியர்கள் மீட்பு பணிகள் தொடர்பாக இணையதளங்களின் மூலம் தூதரகத்தை தொடர்பு கொண்டுள்ளதாகவும் வெளியுறவுத் துறை செயலர் வினய் கோத்ரா தெரிவித்துள்ளார்.
தற்போதைய தகவலின்படி கிட்டத்தட்ட 490 இந்தியர்கள் மீட்கப்பட்டு ஜித்தா நகரிலும், 320பேர் சூடானின் துறைமுகத்திலும் இருப்பதாக இந்திய வெளியுறவுத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.