வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவை நாடு கடத்தக்கோரி அந்நாடு விடுத்துள்ள கோரிக்கை; மத்திய அரசு பரிசீலித்து வருவதாக வெளியுறவு அமைச்சகம் தகவல்

அரசியல் இந்தியா உலகம் செய்திகள் தென்கிழக்கு ஆசிய நாடுகள் நிகழ்வுகள் பெண்கள் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள்

வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவை நாடு கடத்தக்கோரி அந்நாடு விடுத்துள்ள கோரிக்கையை மத்திய அரசு பரிசீலித்து வருவதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.
இந்தியாவின் அண்டை நாடான வங்காளதேசத்தில் கடந்த ஆண்டு அரசுக்கு எதிராக எழுந்த போராட்டத்தில் கலவரம் வெடித்தது. இதில் 1,500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் பல ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். இதனால் பிரதமா் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா நாட்டிலிருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தார்.
தொடர்ந்து வங்கதேச இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனுஸ் பொறுப்பேற்றுள்ளார். இதனிடையே வன்முறை வங்கதேச கலவரம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வந்தது. கடந்த 17 ஆம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில்,ஷேக் ஹசீனா மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை செய்துள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டது.
மரண தண்டனை தீர்ப்பை கடுமையாக விமர்சித்த ஷேக் ஹசீனா, தனக்கு எதிரான தீர்ப்பு ஒரு தலைபட்சமானது மற்றும் அரசியல் நோக்கம் கொண்டது என்றும் இந்த தீர்ப்புகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத அரசாங்கத்தால் வழங்கப்பட்டவை என்றும் குறிப்பிட்டார்.
இதனிடையே வங்காள தேச அரசு ஷேக் ஹசீனாவை நாடு கடத்த கோரி இந்தியாவுக்கு கடிதம் எழுதியது. ஆனால் இது குறித்து இந்திய தரப்பு மவுனம் காத்து வந்தது. இந்த நிலையில் இது குறித்து பேசியுள்ள வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், “ஆம், அந்தக் கோரிக்கையை நாங்கள் பெற்றுள்ளோம், மேலும் அந்தக் கோரிக்கை ஆராயப்பட்டு வருகிறது. வங்காளதேச மக்களின் ஜனநாயகம், அமைதி, ஸ்திரத்தன்மைக்குத் தொடா்ந்து நாங்கள் ஆதரவளிக்கிறோம். இந்த விஷயத்தில் அனைத்து தரப்பினருடனும் நாங்கள் தொடர்ந்து ஆக்கப்பூர்வமாக செயல்படத் தயாராக இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *