ராஜ்யசபா எம்.பி.யும், மறைந்த அஜித் பவாரின் மனைவியுமான சுனேத்ரா பவார், இன்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) சட்டப்பேரவை கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவர் மகாராஷ்டிராவின் துணை முதல்வராக பதவியேற்றார். இதன் மூலம் மகாராஷ்டிராவின் முதல் பெண் துணை முதல்வர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.விமான விபத்தில் அஜித் பவார் உயிரிழந்ததை அடுத்து, என்சிபி கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க இன்று மதியம் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சுனேத்ரா பவார் ஒருமனதாக சட்டப்பேரவை கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.மும்பையில் உள்ள விதான் பவனில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், என்சிபி செயல் தலைவர் பிரபுல் படேல், மாநில தலைவர் சுனில் தட்கரே உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் சுனேத்ரா பவாரின் பெயரை முன்மொழிந்தனர். பின்னர், என்சிபி தலைவர்கள் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸை சந்தித்து, சுனேத்ரா பவார் தேர்வு தொடர்பான கடிதத்தை வழங்கினர்.இதனைத் தொடர்ந்து, லோக் பவனில் நடைபெற்ற சிறிய அளவிலான பதவியேற்பு விழாவில் சுனேத்ரா பவார் துணை முதல்வராக பதவியேற்றார். மகாராஷ்டிர ஆளுநர் ஆச்சார்யா தேவவிரத் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.இந்த விழாவில் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். 62 வயதான சுனேத்ரா பவார் தற்போது ராஜ்யசபா உறுப்பினராக இருந்தாலும், மகாராஷ்டிர சட்டப்பேரவையின் இரு அவைகளிலும் அவர் உறுப்பினராக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

