தமிழகத்தில் இருந்து சட்டவிரோதமாக கடத்தப்பட்ட மிகப் பழமையான 3 சோழர் கால வெண்கல சிலைகளை இந்தியாவிடம் மீண்டும் ஒப்படைக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.இந்த சிலைகள் தற்போது அமெரிக்காவின் வாஷிங்டன்னில் உள்ள ஸ்மித்சோனியன் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்தன. இதில் 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோமாஸ்கந்தர் சிலை, 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பரவையுடன் கூடிய சுந்தரர் சிலை மற்றும் கி.பி. 990ஆம் ஆண்டைச் சேர்ந்த சிவ நடராஜர் சிலை ஆகியவை அடங்கும்.இந்த மூன்றும் இந்து மதத்திற்கு மிகவும் புனிதமான சிலைகளாகும். இவை சட்டவிரோதமாக தமிழகத்தில் இருந்து கடத்தப்பட்டதாக இந்தியா தொடர்ந்து அமெரிக்காவிடம் கோரிக்கை விடுத்து வந்தது.இந்நிலையில், இந்த 3 சிலைகளும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் என்று ஸ்மித்சோனியன் அருங்காட்சியகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு ஆவண காப்பகத்தில் நடைபெற்ற ஆய்வில், இந்த சிலைகள் 1956 முதல் 1959 வரை தமிழக கோயில்களில் இருந்தது புகைப்பட ஆதாரங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

