ரூ.80,000 கோடி ‘கிரேட் நிகோபார்’ திட்டத்திற்கு அனுமதி.

அரசியல் இந்திய வணிகம் இந்தியா சிறப்பு சுற்றுலா செய்திகள் பொருளாதாரம் முதன்மை செய்தி

அந்தமான் நிகோபார் தீவுகளில் செயல்படுத்தப்பட உள்ள ரூ.80,000 கோடி மதிப்பிலான ‘கிரேட் நிகோபார்’ திட்டத்திற்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (என்ஜிடி) ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த திட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தீர்ப்பாயம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆஷிஷ் கோத்தாரி இந்த திட்டத்திற்கு எதிராக என்ஜிடியில் வழக்கு தொடர்ந்திருந்தார். அவர் மனுவில், இந்த திட்டம் 2019 ஆம் ஆண்டு தீவு கடலோர ஒழுங்குமுறை (ICRZ) விதிகளை மீறுகிறது என்று குற்றம் சாட்டினார். குறிப்பாக, சுமார் 700 ஹெக்டேர் பரப்பளவில் நடைபெற உள்ள கட்டுமானப் பணிகள் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் வருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.இந்த வழக்கை, தலைவர் நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவத்சவா தலைமையிலான ஆறு பேர் கொண்ட சிறப்பு அமர்வு விசாரித்தது. திட்டத்திற்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியில் போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளன என்றும், இதில் தலையிட தேவையான காரணங்கள் இல்லை என்றும் கூறி மனுக்களை தள்ளுபடி செய்தது. மேலும், அனுமதியில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து நிபந்தனைகளையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கடுமையாக பின்பற்ற வேண்டும் என்றும் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.ரூ.80,000 கோடி மதிப்பிலான இந்த திட்டம் 166 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் செயல்படுத்தப்பட உள்ளது. இதில் 130 சதுர கிலோமீட்டர் வனப்பகுதியும் அடங்கும். திட்டத்தின் கீழ் சரக்கு பெட்டக மாற்று முனையம், ஒருங்கிணைந்த நகரம், ராணுவ மற்றும் சிவில் பயன்பாட்டிற்கான விமான நிலையம், 450 எம்.வி.ஏ திறன் கொண்ட எரிவாயு மற்றும் சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையம் ஆகியவை அமைக்கப்பட உள்ளன. இந்த திட்டம் தீவுகளின் பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *