கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. அதன்படி, விஜய் நாளை மார்ச் 10 அன்று டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதால், அவரிடம் மேலும் தகவல்கள் பெற சிபிஐ அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.கடந்த ஆண்டு செப்டம்பர் 27 அன்று கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சார பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து விசாரணை நடத்தி வரும் சிபிஐ அதிகாரிகள், விஜய்யை ஏற்கனவே டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் இரண்டு முறை ஆஜராக அழைத்து விசாரணை நடத்தியுள்ளனர். முதலில் நடந்த விசாரணை சுமார் 7 மணி நேரம் நீடித்தது. பின்னர் மீண்டும் அழைக்கப்பட்ட போது காலை 10.30 மணிக்கு தொடங்கி சுமார் 6 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

