மேற்கு வங்கத் தேர்தலில் வரலாற்று வெற்றியை பதிவு செய்த பாஜக; ஆட்சியை இழந்த மம்தா

அரசியல் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் தேர்தல் செய்திகள் 2024 நிகழ்வுகள் பெண்கள் மற்றவை முதன்மை செய்தி

கோல்கத்தா: மேற்கு வங்காள மாநில சட்டமன்றத் தேர்தலில் பாஜக 190க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் 15 ஆண்டு திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சிக்கு பாஜக முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.
இத்தேர்தல் முடிவுகள் குறித்து பாஜக மூத்த தலைவர் சுவந்து அதிகாரி கூறுகையில், “மக்கள் இதுவரை தவறான ஆட்சிக்கு எதிராக வாக்களித்து வந்துள்ளனர். இந்துக்கள் மற்றும் பழங்குடியின மக்கள் அனைவரும் பாஜகவிற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
“பாஜக நிறுவனர் ஷியாம் பிரசாத் முகர்ஜி காலத்தில் இருந்தே மேற்கு வங்கத்தில் ஆட்சியைப் பிடிக்கவேண்டும் என்பது பாஜகவின் கனவாக இருந்தது. ஆனால், அது முடியாமல் இருந்தது.
“இப்போது அந்தக் கனவு நனவாகி இருக்கிறது. நாட்டின் கலாசாரத் தலைநகரமாக மேற்கு வங்கம் இருக்கிறது. தற்போதைய அரசாங்கத்தின் செயல்பாடுகள்தான் ஆட்சி மாற்றத்திற்குக் காரணம் ஆகும். பிரசாரத்தை முன்னெடுத்துச் சென்று கடுமையாக உழைத்ததற்காகப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்,’’ என்று தெரிவித்தார்.
செய்தியாளர்கள், “நீங்கள்தான் அடுத்த முதல்வரா?,” என்று கேட்டதற்கு அதனை நிராகரித்தார். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின்கீழ் தேர்தலைச் சந்தித்தோம். பாஜகவின் கூட்டுத்தலைமை இதுகுறித்து முடிவு செய்யும் என்று அவர் கூறினார்.
மேற்கு வங்காளத்தில் முதல்முறை ஆட்சி அமைக்கும் பாஜகவின் முதலமைச்சர் பதவிக்கான முன்னணியில் இருப்பவர் சுவேந்து அதிகாரி. இவர் தற்போது மேற்கு வங்க சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக உள்ளார். பாஜக மாநிலத் தலைவராக சாமிக் பட்டாச்சார்யா உள்ளார்.
தேர்தல் முடிவுகள் குறித்து மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாஜக முதலில் தங்கள் முடிவுகளை ஒரு திட்டத்தின் ஒரு பகுதியாகக் காண்பிக்கும் என்று கணித்திருந்தேன். ஆனால் நானும், எனது கட்சியினரும் புலிக்குட்டிகளைப் போல போராடினோம்.
“தேர்தலுக்கு முன்பு 89 லட்சம் வாக்காளர்களை நீக்கிவிட்டனர். இது கடந்த 2021ஆம் ஆண்டு வெற்றிக்குக் காரணமாக இருந்த வாக்கு எண்ணிக்கை வித்தியாசத்திற்குச் சற்று அதிகமாகும். எனவே அனைத்து வாக்கு எண்ணும் முகவர்கள் மற்றும் வேட்பாளர்கள் வாக்கு எண்ணும் இடத்தை விட்டு வெளியேற வேண்டாம். மத்தியப் படைகளுடன் இணைந்து தேர்தல் ஆணையம் தனது விருப்பப்படி விளையாடுகிறது,” என்றார் மம்தா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *