டெல்லியில் இன்று நடைபெற்ற நிதி ஆயோக் 11-வது கூட்டத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் கலந்து கொண்டார். அப்போது பல்வேறு கோரிக்கைகள் மற்றும் வலியுறுத்தல்களை பிரதமர் நரேந்திர மோடியிடம் முதலமைச்சர் விஜய் முன் வைத்துள்ளார். அதன்படி அதிகாரமளிக்கப்பட்ட மாநிலங்கள் கூட்டுறவு கூட்டாட்சி அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பதன் மூலம் மட்டுமே வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க முடியும் என தமிழ்நாடு உறுதியாக நம்புவதாக கூறியுள்ளார்.
வெளிப்படையான நிர்வாகம் சமூக நீதி அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி இளைஞர்களுக்கு அதிகாரம் அளித்தல் மற்றும் சமச்சீரான முன்னேற்றம் ஆகியவற்றை கொள்கைகளாக முன்னிறுத்தியதன் படி தமிழ்நாட்டு மக்கள் தமிழக அரசுக்கு சிறப்பான தீர்ப்பினை வழங்கி இருப்பதாக தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளை சுட்டிக்காட்டி பேசியுள்ளார். மேலும் தமிழ்நாட்டின் நலன்களையும் மக்களின் விருப்பங்களையும் உறுதியாக பாதுகாக்க கூடிய வேளையில் மத்திய அரசுடன் ஆக்கபூர்வமான ஒத்துழைப்போடு தமிழ்நாடு அரசு செயல்படுவதற்கு உறுதியாக இருப்பதாகவும் முதலமைச்சர் விஜய் கூட்டத்தில் பேசியுள்ளார்.
2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கான மத்திய அரசின் முயற்சிக்கு ஈடாக 2036-ம் ஆண்டிற்குள் 1.5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்துவதற்கு தமிழ்நாடு அரசு பணியாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் “2047 வளர்ச்சி அடைந்த இந்தியா” என்ற பயணத்தில் தமிழ்நாட்டின் பங்களிப்பை வழங்கும் வகையில் முக்கியமான சில கோரிக்கைகளை முதலமைச்சர் ஜோசப் விஜய் நிதி அயோக் கூட்டத்தில் வழங்கியுள்ளார். அதன்படி,
வேலை வாய்ப்பு இயக்கத்தை செயல்படுத்தவும் தொழில்நுட்பத் திறன் மையங்களை அமைக்கவும் செயற்கை நுண்ணறிவு இணைய பாதுகாப்பு மேக கணினி தொழில்நுட்பம் மின்சார வாகன தொழில்நுட்பம் மற்றும் செமி கண்டக்டர் உள்ளிட்ட துறைகளில் இளைஞர்களுக்கு பயிற்சி வழங்க மத்திய அரசின் உதவி வேண்டும்.
உலகத் தரத்திலான ஸ்டார்ட் அப் நிறுவன மையங்களை அமைப்பதற்கும் முதலீட்டு சூழலை தமிழ்நாட்டில் உருவாக்குவதற்கும் ஆராய்ச்சிகளுக்கான நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு அதிகரிக்க வேண்டும்.
நீட் தேர்வை தமிழ்நாடு அரசு எதிர்க்கிறது அதே நேரத்தில் மருத்துவம் ஆயுர்வேதம் யோகா யுனானி சித்தா மற்றும் ஹோமியோபதி மருத்துவ படிப்புகளில் மாநில இட ஒதுக்கீட்டின் கீழ் பயில பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்களை சேர்க்க அனுமதி வழங்க வேண்டும்.
அனைவருக்கும் வீடு என்ற கனவு திட்டத்தை நிறைவேற்றுவதற்காக மத்திய அரசு உரிய நிதியை தமிழக அரசுக்கு வழங்க வேண்டும்.
தரமான மருத்துவ சேவைகள் மக்களுக்கு எளிதில் கிடைக்க தமிழ்நாட்டின் கோவையில் இரண்டாவது எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க வேண்டும்.
இலங்கை மற்றும் பாகிஸ்தான் கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டின் மீனவர்களை விடுவிக்கவும் மீனவர்கள் அனைவரும் பாதுகாப்பாக தாயகம் திரும்புவதை உறுதி செய்ய தூதர்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
1,076 கிலோ மீட்டர் நீள தமிழ்நாட்டின் கடற்கரை பகுதி புயல் மற்றும் வெள்ள பேரிடர்களால் பாதிக்கப்படுகிறது எனவே உயிரிழப்பு இல்லா பேரிடர் மேலாண்மை இயக்கத்தை செயல்படுத்துவதற்கு மத்திய அரசின் மேம்பட்ட ஆதரவு தமிழ்நாட்டிற்கு தேவைப்படுகிறது.
தமிழ்நாட்டின் குலசேகரப்பட்டினத்தில் அமைக்கப்பட்டுள்ள விண்வெளி உற்பத்தி மையத்தை தேசிய விண்வெளி உற்பத்தி மையமாக அறிவிக்க வேண்டும்.
செங்கல்பட்டு முதல் திருச்சி வரை மற்றும் திருச்சி பஞ்சப்பூர் முதல் கரூர் ஜீயபுரம் வரை 6 வழி சாலையாக மேம்படுத்த வேண்டும்
கரூர் கோயம்புத்தூர் வழித்தடத்தை ஆறு வழி சாலையாக மேம்படுத்துவதோடு மாதாவரம் சோழவரம் இடையே உயர்த்தப்பட்ட எலிவேட்டர் காரிடார் அமைக்க வேண்டும்.
சென்னை முதல் கன்னியாகுமரி வரை அதிவேக ரயில் வலைத்தளம் அமைக்க வேண்டும்.
ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தை 2,283 கோடி அளவில் விரிவாக்கம் செய்ய மத்திய அரசு உதவி வழங்க வேண்டும்.
மத்திய அரசின் “விபி ஜி ராம் ஜி” திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்புகளை உருவாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
“சமக்ரா சிக்சா” திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய 3,284 கோடியை எவ்வித நிபந்தனைகளையும் இன்றி உடனடியாக விடுவிக்க வேண்டும்
திருக்குறளை தேசிய இலக்கியமாக அறிவிக்க வேண்டும்.
இத்தகைய கோரிக்கைகளை வழங்கியதோடு தமிழ்நாட்டில் சமீபத்தில் தொடங்கப்பட்ட சிங்கப் பெண் சிறப்பு படைத்திட்டம் உள்ளிட்டவையின் சிறப்பம்சங்கள் குறித்தும் முதலமைச்சர் ஜோசப் விஜய் நிதி ஆயோக் கூட்டத்தில் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

