கேரள மாநிலத்தைச் சேர்ந்த 78 வயதான ஓய்வுபெற்ற செவிலியர் அன்னம்மா ட்ரூப் வயலுங்கர், சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தனது தனித்துவமான ‘அக்வா யோகா’ (ஜல யோகா) பயிற்சியால் சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்துள்ளார்.கோட்டயம் மாவட்டத்தில் உள்ள தனது பண்ணை வீட்டின் நீச்சல் குளத்தில் தினமும் 30 நிமிடங்கள் தண்ணீரில் யோகா செய்து வரும் அன்னம்மாவின் ஆரோக்கிய வாழ்க்கை முறை பலரையும் வியக்க வைத்துள்ளது.1948-ஆம் ஆண்டு பிறந்த அன்னம்மா, ஐரோப்பாவில் நர்சிங் படிப்பை முடித்து ஜெர்மனி மற்றும் சுவிட்சர்லாந்து அரசு மருத்துவமனைகளில் தலைமை செவிலியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். சுவிட்சர்லாந்தில் பணியாற்றிய காலத்தில் சக செவிலியர் ஒருவரின் மூலம் ஜல யோகாவை அறிந்த அவர், அதை தொடர்ந்து பல ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறார்.இதுகுறித்து அன்னம்மா கூறுகையில், “தண்ணீரில் யோகா செய்வதால் நீரின் எதிர்ப்பு சக்தி தசைகளை வலுப்படுத்துகிறது. மேலும் இதய ஆரோக்கியம், நுரையீரல் செயல்திறன் மற்றும் உடல் சமநிலையை மேம்படுத்த உதவுகிறது. குறிப்பாக வயதானவர்களுக்கு இது மிகவும் பாதுகாப்பான மற்றும் பயனுள்ள உடற்பயிற்சியாகும்” என்றார்.கொரோனா காலத்திற்குப் பிறகு நுரையீரல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் அதிகம் பேசப்படும் நிலையில், ஜல யோகா உடல்நலத்தை பாதுகாக்கும் சிறந்த வழியாக கருதப்படுகிறது.

