ஒன்றிய அரசின் வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு முறைப்படுத்துதல் சட்டம் (FCRA) தொடர்பான கடுமையான விதிமுறைகளின் காரணமாக, இந்தியாவில் செயல்பட்டு வந்த பெரும்பாலான தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் வெளிநாட்டு நிதி பெறும் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன அல்லது காலாவதியாகியுள்ளன.ஒன்றிய உள்துறை அமைச்சகம் 2012 முதல் FCRA-வில் பதிவு செய்யப்பட்ட அமைப்புகளின் தரவுகளை பராமரித்து வருகிறது. அதன்படி, இதுவரை மொத்தம் 52,159 தன்னார்வ நிறுவனங்கள் மற்றும் சங்கங்களுக்கு வெளிநாட்டு நிதி பெற அனுமதி வழங்கப்பட்டது.எனினும், நிதிப் பரிமாற்றங்களில் வெளிப்படைத்தன்மை மற்றும் நிதி பயன்பாட்டை உறுதி செய்யும் வகையில் FCRA விதிகள் கடுமையாக்கப்பட்டன. புதிய விதிமுறைகளை பின்பற்றத் தவறியதாலும், ஐந்து ஆண்டுகள் முடிந்த பிறகு உரிமத்தை புதுப்பிக்காததாலும் 15,206 நிறுவனங்களின் உரிமங்கள் காலாவதியானதாக அறிவிக்கப்பட்டன.மேலும், 2015ஆம் ஆண்டில் மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமைப்புகள் FCRA உரிமத்தை இழந்தன. இதுவரை மொத்தம் 22,498 நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இதில், கூடங்குளம் அணுமின் நிலையத் திட்டத்திற்கு எதிராக செயல்பட்ட சில தமிழக அமைப்புகளின் உரிமங்களும் ரத்து செய்யப்பட்டிருந்தன.தற்போது, பதிவு செய்யப்பட்ட மொத்த அமைப்புகளில் 27.7%, அதாவது 14,455 நிறுவனங்கள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன. மீதமுள்ள 72.3% நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன அல்லது காலாவதியாகியுள்ளன.மாநில வாரியாக பார்க்கும்போது, 2,104 செயல்பாட்டிலுள்ள FCRA பதிவு பெற்ற அமைப்புகளுடன் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. மாநிலத்தில் 2,865 உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், 1,774 உரிமங்கள் காலாவதியாகியுள்ளன.அடுத்ததாக, மகாராஷ்டிராவில் மொத்தம் 5,440 பதிவு பெற்ற அமைப்புகளில் 1,583 மட்டுமே தற்போது செயல்பாட்டில் உள்ளன. அங்கு 2,211 உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், 1,646 உரிமங்கள் காலாவதியாகியுள்ளன.உரிமங்கள் ரத்து மற்றும் காலாவதியான அமைப்புகளின் சதவீத அடிப்படையில் பீகார் (85.2%) முதலிடத்தில் உள்ளது. தொடர்ந்து உத்தரப் பிரதேசம் (83.7%), நாகாலாந்து (83.3%), திரிபுரா (80%), மகாராஷ்டிரா (78.9%), மணிப்பூர் (78.6%) மற்றும் மேற்கு வங்கம் (78.2%) ஆகிய மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன.வடகிழக்கு மாநிலங்களில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் FCRA உரிமங்கள் பெருமளவில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

