தேசிய விருது வென்ற தமிழ் திரைக்கலைஞர்களுக்கு நடிகர் சூர்யா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்திய சினிமாவில் திரைப்படங்களுக்கான தேசிய விருதை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் வழங்குகிறது. அதன் படி 2024ம் ஆண்டுக்கான 72வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று முன் தினம் (ஜூலை 18) அறிவிக்கப்பட்டன.
இதில் சிவகார்த்திகேயனின் ‘அமரன்’, தனுஷின் ‘கேப்டன் மில்லர்”, விஜய் சேதுபதியின் ‘மகாராஜா”, கார்த்தியின் ‘மெய்யழகன்” ஆகிய படங்கள் பல்வேறு பிரிவுகளில் தேசிய விருதுகளை வென்றுள்ளன. மொத்தமாக தமிழ் சினிமா 10 விருதுகளை அள்ளியது.
இந்த நிலையில் நடிகர் சூர்யா தேசிய விருது வென்ற தமிழ் திரைக்கலைஞர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் “72-வது தேசிய திரைப்பட விருதுகளை வென்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். எனது மூத்த கலைஞர்கள் மற்றும் நண்பர்களுக்கு உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். சிறந்து விளங்க நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் இந்தியத் திரைப்பட உலகை வளம் சேர்க்கின்றன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

