கரூர் அரசு பணி ஆணை ரத்து விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்

அரசியல் இந்தியா சிறப்பு செய்திகள் நீதி மன்றம் முதன்மை செய்தி

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் வழங்கப்பட்ட அரசு வேலை நியமன ஆணையை ரத்து செய்த உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. மேலும், இந்த வழக்கில் எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க வேண்டாம் எனக் கோரி கேவியட் மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற தவெக பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். 110-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.இதையடுத்து, கடந்த 10ஆம் தேதி கரூர் சென்ற முதலமைச்சர் விஜய், உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலைக்கான பணி நியமன ஆணையை வழங்கினார்.இந்த முடிவை எதிர்த்து, நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த தீரன் திருமுருகன், வழக்கறிஞர் சீனி அகமது உள்ளிட்டோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணை நடைபெற்று வரும் நிலையில் அரசு வேலை வழங்குவது விசாரணையை பாதிக்கக்கூடும் என்றும், அரசு பணிகள் தகுதி மற்றும் போட்டித் தேர்வு அடிப்படையில்தான் வழங்கப்பட வேண்டும் என்றும் மனுதாரர்கள் வாதிட்டனர்.இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் முதலில், வழங்கப்பட்ட பணிநியமனம் வழக்கின் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டதாக இருக்கும் என்று தெரிவித்தது. பின்னர் நடைபெற்ற விசாரணையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கிய அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டது.இந்த உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு தற்போது உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவையும், கேவியட் மனுவையும் தாக்கல் செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *