அமெரிக்காவில் இன்ஸ்டாகிராம் மற்றும் முகநூல் பயன்படுத்தும் 13 முதல் 18 வயதுக்குட்பட்ட பதின்ம வயதினருக்கு நேரக் கட்டுப்பாடு விதிக்க மெட்டா நிறுவனம் முடிவு செய்துள்ளது. சிறுவர்களின் ஆன்லைன் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அமெரிக்காவின் 29 மாகாணங்களுடன் ஏற்பட்ட 18 பில்லியன் டாலர் (சுமார் ரூ.1.71 லட்சம் கோடி) மதிப்பிலான இழப்பீட்டு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இந்த புதிய கட்டுப்பாடுகளை கொண்டுவர மெட்டா ஒப்புக்கொண்டுள்ளது. இதன்படி, இன்ஸ்டாகிராம் மற்றும் முகநூல் ஆகிய இரண்டு செயலிகளையும் சேர்த்து பதின்ம வயதினர் ஒரு நாளைக்கு அதிகபட்சம் 2 மணி நேரம் மட்டுமே பயன்படுத்த முடியும். இந்த புதிய விதிமுறைகள் நீதிமன்றத்தின் ஒப்புதலுக்குப் பிறகு அமலுக்கு வரவுள்ளன. மேலும், இந்த கட்டுப்பாடுகள் அடுத்த 10 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

