இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்கு எதிராக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக முறைகேடுகள் நடப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தைத் தொடர்ந்து, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என்றும், வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளப்படும் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை (SIR) நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றன. வாக்காளர் பட்டியலில் இருந்து தகுதியுள்ள மக்களின் பெயர்கள் நீக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. ஆனால், தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் அரசியல் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை ஆணையம் மறுத்துள்ளது.இந்த விவகாரம் தொடர்பாக ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்தைச் சந்திக்க நேரம் கேட்டிருந்தனர். ஆனால், இந்த விவகாரம் தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், தலைமை நீதிபதி அவர்களைச் சந்திக்க மறுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்குப் பதிலாக, சட்டப்படி மனு தாக்கல் செய்யலாம் என அறிவுறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.இதையடுத்து, ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் உச்சநீதிமன்றத்தை நோக்கிப் பேரணியாகச் செல்ல முயன்றனர். இந்தப் பேரணியை டெல்லி போலீசார் தடுத்து நிறுத்தினர். இதற்கிடையில், எதிர்க்கட்சிகளின் சட்டக் குழு தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

