உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் 3 ஆண்டுகளுக்குமேல் நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முயற்சித்து வருகிறார்.அதன்படி, போர் நிறுத்த உடன்பாட்டிற்கு வர உக்ரைனுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் அந்நாட்டிற்கு வழங்கி வந்த ராணுவ உதவி, உளவு தகவல்களை அமெரிக்கா நிறுத்தியது. மேலும், போர் நிறுத்தம் தொடர்பாக உக்ரைன், அமெரிக்கா ஆகிய நாடுகள் சவுதி அரேபியாவில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. அந்த வகையில் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ரஷ்யா உடனான போரை 30 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்த உக்ரைன் சம்மதம் தெரிவித்துள்ளது. ரஷ்யா உடன் பேசி விரைவில் போர் நிறுத்தத்தை கொண்டுவர ஜெலன்ஸ்கி கோரிக்கை வைத்துள்ளார்.தற்காலிக போர் நிறுத்தத்திற்கு உக்ரைன் சம்மதம் தெரிவித்ததையடுத்து அந்நாட்டிற்கு நிறுத்தி வைக்கப்பட்ட ராணுவ உதவி, உளவு தகவல்களை மீண்டும் வழங்குவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. தற்காலிக போர் நிறுத்தம் குறித்து ரஷ்யாவுடன் அமெரிக்கா இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.
