தென் கொரியாவில் தமிழ் மொழியின் பெருமையை உலகிற்கு எடுத்துச் செல்லும் வகையில், 205-வது திருவள்ளுவர் சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. கொரிய தமிழ்ச் சங்கம், கவிஞர் ஆலந்தூர் கோ. மோகனரங்கன் தமிழ் ஆய்வு மையம் மற்றும் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம் இணைந்து நடத்திய முதலாம் பன்னாட்டு இந்திய-தமிழ்-கொரிய ஆய்வு மாநாடு, விருதுகள் வழங்கும் விழா மற்றும் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா ஆகியவை அக்டோபர் 31, 2026 அன்று தென் கொரியாவின் டேஜான் அருகே உள்ள ஓசோங் அரங்கில் நடைபெற்றன. உலகின் பல்வேறு நாடுகளில் இதுவரை 204 திருவள்ளுவர் சிலைகளை நிறுவியுள்ள விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் டாக்டர் விஜி சந்தோசம், 205-வது சிலையைத் தென் கொரியாவில் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் இந்தியத் தூதரக அதிகாரிகள், தென் கொரிய கல்வியாளர்கள், தமிழ் ஆர்வலர்கள், மருத்துவர்கள், பேராசிரியர்கள் மற்றும் கனடா, ஆஸ்திரேலியா, மலேசியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். விழாவில் ஆய்வரங்கம், கலை நிகழ்ச்சிகள் மற்றும் பாரம்பரிய நடைப்பயணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இதுகுறித்து பேசிய டாக்டர் விஜி சந்தோசம், உலகம் முழுவதும் திருவள்ளுவர் சிலைகளை நிறுவுவதன் மூலம் தமிழ் மொழியையும் திருக்குறளின் கருத்துகளையும் பரப்பி வருவதாகக் கூறினார். மேலும், அறம், பொருள், இன்பம் என மனித வாழ்க்கைக்கு தேவையான உயர்ந்த நெறிகளை எடுத்துரைக்கும் திருக்குறள், மதங்களைக் கடந்து அனைவருக்கும் பொதுவான நூல் என்றும் அவர் தெரிவித்தார். தென் கொரியாவில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டிருப்பது, தமிழ் மொழியின் தொன்மையையும் திருக்குறளின் உலகளாவிய சிறப்பையும் வெளிப்படுத்தும் முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.
