‘நேர்கொண்ட பார்வை, வலிமை’ என தனது முந்தைய படங்களை விட இந்தப் படத்தில் அவரது ரசிகர்களை முழுவதுமாகத் திருப்திப்படுத்திவிட்டார்.
அஜித் ரசிகர்களுக்காக காட்சிக்குக் காட்சி அஜித்தை ஆட விட்டும், அதிரடி செய்யவிட்டும், சிரிக்க விட்டும், நடக்கவிட்டும், நடிக்கவிட்டும் இந்த பொங்கல் போட்டியில் ‘ஆட்ட நாயகன்’ விருதை வாங்கிக் கொடுத்துவிட்டார்.
சென்னையில் உள்ள ‘யுவர்ஸ் பேங்க்’ என்ற பேங்கில் இருந்து 500 கோடி ரூபாயை கொள்ளையடிக்க உதவி கமிஷனரும் சிலரும் திட்டம் தீட்டுகிறார்கள். அவர்கள் கொள்ளையடிக்கச் சென்ற அதே பேங்க்கில் சர்வதேச கேங்ஸ்டர் ஆன அஜித் சென்று அந்தக் கொள்ளையர்களையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார். அவரைப் பிடிக்க கமிஷனர் சமுத்திரக்கனி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு அஜித்துடன் பேச்சு வார்த்தை நடத்துகிறார்கள். ஆனால், உண்மையிலேயே அந்த பேங்க்கில் கொள்ளையடிப்பது யார் என்ற உண்மையை இந்த நாட்டு மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார் அஜித். அது என்ன என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
ஒரு அதிரடி ஆக்ஷன் கதையில் தங்களது வாடிக்கையாளர்களிடம் வங்கிகள் எப்படியெப்படி எல்லாம் கொள்ளையடிக்கிறார்கள் என்பதுதான் படத்தின் மையக்கரு. வங்கிகளால் மக்கள் எப்படி ஏமாறுகிறார்கள் என படம் பார்ப்பவர்களுக்கும் சேர்த்து கொஞ்சம் பாடம் நடத்துகிறார்கள்.
மங்காத்தா’ படத்திற்குப் பிறகு மீண்டும் ஒரு நெகட்டிவ்வான கதாபாத்திரத்தில் சர்வதேச கேங்ஸ்டர் ஆக அஜித். படம் ஆரம்பமான சிறிது நேரத்திலேயே அவரது ‘என்ட்ரி’ அதிரடியாக ஆரம்பமாகிறது. அந்த அதிரடி அப்படியே கடைசி வரை இருப்பதுதான் படத்திற்குப் பெரிய பிளஸ். படம் முழுவதும் அவரது ஒன் மேன் ஷோ தான். தன் ரசிகர்கள் கொண்டாடுவதற்காகவே இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
அஜித்தின் பார்ட்னர் ஆக மஞ்சு வாரியர். அவரது கதாபாத்திரமும், நடிப்பும் சிறப்பு.
டெக்னீஷியன்களில் அதிரடியான சண்டைக் காட்சிகளை அமைத்துள்ள சுப்ரீம் சுந்தர் தான் முதலில் பாராட்டப்பட வேண்டியவர். ஜிப்ரானின் பின்னணி இசை படத்தின் வேகத்திற்கு இன்னும் பரபரப்பைக் கூட்டுகிறது.
தேவையற்ற காட்சிகள் என்று எதுவுமில்லை, பிளாஷ்பேக் காட்சிகளைக் கூட சுருக்கமாகவே சொல்லி முடித்திருக்கிறார்கள். வங்கிகளில் தரும் எந்த ஒரு விண்ணப்பத்திலும் கண்ணை மூடிக் கொண்டு கையெழுத்துப் போட வேண்டாம், பணத்திற்காகப் போராசைப்பட வேண்டாம் என கடைசியாக தேவையான ஒரு மெசேஜையும் சொல்லி முடித்திருக்கிறார்கள்.
ரேட்டிங் – 3.25/5