மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றுள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், தமிழ்நாட்டின் குரலாக டெல்லியில் ஒலிப்பேன் என உறுதிபட தெரிவித்துள்ளார்.
’புதிய தொடக்கம்’ என கேப்ஷனுடன் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியேற்பு நிகழ்வை வெறும் சடங்கிற்காக அல்லாமல், விசுவாசம், தைரியம், மனசாட்சி ஆகியவற்றுடன் சேவை செய்வதற்கான உறுதிமொழியாக கருதியாதாகக் கூறியுள்ளார்.
இந்த நிகழ்வு தன்னுடையது மட்டுமல்ல எனவும், தன்னை வளர்த்தெடுத்த தமிழ்நாட்டு மக்களுடன் பகிர்ந்து கொள்வதாகவும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். குறைகளை மட்டும் கூறுவதற்காக தான் நாடாளுமன்றம் செல்லவில்லை எனத் தெரிவித்துள்ள கமல்ஹாசன், இந்தியாவின் வளர்ச்சிக்கான யோசனை வழங்குபவராக செயல்படுவேன் எனக் கூறியுள்ளார்.
எங்கு எதிர்க்க வேண்டுமோ, அங்கு காரணங்களோடு எதிர்ப்பேன், எங்கு ஆதரிக்க வேண்டுமோ, அங்கு நம்பிக்கையோடு ஆதரிப்பேன் என்றும் கமல்ஹாசன் கூறியுள்ளார். இதனிடையே, திமுக மற்றும் கூட்டணி கட்சி சார்பில் எம்.பியாக பதவியேற்ற கமல்ஹாசன் உள்ளிட்டோருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“I belong to the Dravidian stock” என அண்ணா முழங்கிய நாடாளுமன்ற மாநிலங்களவையில், திமுகவின் வாதங்களை, தமிழ்நாட்டின் உரிமைக்குரலை நமது எம்.பி.,க்கள் ஓங்கி ஒலிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

