2022-23 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை 6.50 கோடி பேரை எட்டி புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
ஆண்டு வருமான வரிக்கணக்கை செலுத்துவதற்காக ஜூலை 31 கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த மார்ச் மாதத்தோடு ஆண்டு இறுதிக் கணக்கு முடிவடைந்த நிலையில் 2022-2023 ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய வருமான வரித்துறை உத்தரவிட்டிருந்தது. அதன்படி ஒவ்வொரு வருடமும் ஜூலை 31ம் தேதி கடைசி நாள் என காலக்கெடுவை நிர்ணயிப்பது வழக்கம்.
அதன்படி கடந்த வாரம் முழுக்கவே அதிகமான அரசு மற்றும் தனியார் ஊழியர்கள், தொழிலதிபர்கள் மற்றும் தொழில் முனைவோர் ஆகியோர் வருமான வரியைத் தாக்கல் செய்தனர்.
நேற்று மட்டும் 26 லட்சத்துக்கும் அதிகமானோர் வருமான வரி தாக்கல் செய்துள்ளதாகவும், வருமான வரி தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாகவும் வருமான வரித்துறை தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இன்று ஒரே நாளில் மாலை 6 மணி நிலவரப்படி 36.91லட்சம் பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர். இதன்படி மொத்தமாக 6.50 கோடி பேர் வருமான வரி தாக்கல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.