பெங்களூருவில் எதிர்கட்சிகளின் 2 ஆவது ஆலோசனைக் கூட்டம் வரும் 17 மற்றும் 18 ஆம் தேதி நடைபெறும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிரான வலுவான கூட்டணியை உருவாக்க எதிர்கட்சிகள் முனைப்பு காட்டி வருகின்றனர். இதன் விளைவாக கடந்த 23 ஆம் தேதி பாட்னாவில் எதிர்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், ஷிம்லாவில் அடுத்தக்கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
பின்னர், பெங்களூருவில் வரும் 13 மற்றும் 14 ஆம் தேதி எதிர்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று கூறப்பட்டது. இதனை தொடர்ந்து மகாராஷ்ட்ராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்ட நிலையில், எதிர்கட்சிகளின் ஆலோசனைக்கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், வரும் 17 மற்றும் 18 ஆம் தேதி பெங்களூருவில் ஆலோசனைக்கூட்டம் நடைபெறும் என்று காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார். பிகார் மற்றும் கர்நாடகாவில், சட்டமன்றம் கூட உள்ள நிலையில், அதற்கு ஏற்ப ஆலோசனைக் கூட்டம் தேதி மாற்றியமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.