என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் வரும் 28 ஆம் தேதி ராமேஸ்வரத்தில் தொடங்க உள்ள பாதயாத்திரையை உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைக்க உள்ளார்.
ராமேஸ்வரத்தில் இருந்து தனது நடைபயணத்தை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொடங்குவதற்கு, அந்த தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிட உள்ளதே முக்கிய காரணமாக கூறப்படுகிறது. மற்றொரு புறம், மீனவர் சங்க மாநாட்டில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலினும் ராமநாதபுரம் செல்கிறார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது அப்போதைய பாஜக மாநில தலைவர் எல் முருகன் நடத்திய வேல் யாத்திரை, 2001 ஆம் ஆண்டுக்கு பிறகு 4 எம்எல்ஏக்களை அக்கட்சிக்கு பெற்று தந்தது. மத்திய இணையமைச்சர் பதவியும் எல். முருகனுக்கு சென்று சேர்ந்தது.
மக்களவை தேர்தலை எதிர்நோக்கி உள்ள இச்சமயத்தில், இதே போல் மற்றொரு பாத யாத்திரையை நடத்த உள்ளார் தற்போதைய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.
தமிழ்நாடு அரசில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக குற்றஞ்சாட்டி வரும் அண்ணாமலை, அண்மையில் திமுகவினர் சொத்து விவரங்கள் என்று கூறி பட்டியலை வெளியிட்டார். அதை தொடர்ந்து, அரசியல்வாதிகளின் ஊழல் விவரங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக தமிழ்நாடு முழுவதும் இந்த நடைப்பயணத்தை மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளார்.
‘என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் வரும் 28 ஆம் தேதி ராமேஸ்வரத்தில் தொடங்க உள்ள பாதயாத்திரையை உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைக்க உள்ளார். இதில், எடப்பாடி பழனிசாமி உள்பட பல்வேறு கூட்டணிக்கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

