தனுஷ்கோடியில் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய தரைப்பாலம் மண் அரிப்பால் தற்போது வெளியே வந்துள்ளது.ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அருகே உள்ள தனுஷ்கோடி மிகவும் பிரசித்திபெற்ற சுற்றுலா தலமாகும். இங்கு கடலின் அழகை காண ஏராளமானோர் வந்து செல்கின்றனர். தனுஷ்கோடி முகுந்தராயர் சத்திரம் கடற்கரையோர பகுதியில் மேடான பகுதியிலிருந்து தாழ்வான பகுதிக்கு நீரோட்டம் செல்வதற்காக தரைப்பாலம் அமைக்கப்பட்டது. கடந்த 1964ம் ஆண்டு ஏற்பட்ட புயல் மற்றும் கடலில் ஏற்பட்ட மாற்றத்தால் தரைப்பாலம் நீரில் மூழ்கியது. இந்நிலையில், தனுஷ்கோடி, முகுந்தராயர் சத்திரம், அரிச்சல்முனை பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக காற்றின் வேகம் வழக்கத்தைவிட அதிகரித்துள்ளது. கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால், முகுந்தராயர் சத்திரம் கடற்கரை ஓரத்தில் அதிகளவில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளதால், கடலில் மூழ்கியிருந்த பழமையான தரைப்பாலத்தின் ஒருபகுதி தற்போது வெளியே தெரிகிறது. இதனை சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் பார்வையிட்டு செல்கின்றனர்.
