பாகுபலி ராக்கெட் வெற்றி: 4,410 கிலோ சி.எம்.எஸ்-03 செயற்கைக்கோளை இஸ்ரோ விண்ணில் ஏவியது

அறிவியல் மற்றும் அறிவியல் கண்டுபிடிப்புகள் இந்திய வணிகம் இந்தியா உலகம் கண்டுபிடிப்பு சிறப்பு செய்திகள் பொருளாதாரம் விண்வெளி சார்ந்தவை

இஸ்ரோவின் ‘பாகுபலி’ ராக்கெட் வரலாறு படைத்துள்ளது. 4,410 கிலோ எடையுள்ள சி.எம்.எஸ்-03 எனும் கனரக தகவல் தொடர்பு செயற்கைக்கோளை ஏற்றி, எல்.வி.எம்.3-எம்5 ராக்கெட் (பாகுபலி ராக்கெட்) ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்தில் இருந்து நேற்று மாலை 5.26 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. ரூ.1,600 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்ட இந்த செயற்கைக்கோள், இந்தியாவின் தகவல் தொடர்பு உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. விண்ணில் பாய்ந்து புறப்பட்ட 16 நிமிடம் 29 விநாடிகளில், செயற்கைக்கோள் பூமியிலிருந்து 179 கிலோமீட்டர் உயரத்தில் திட்டமிட்ட சுற்றுப்பாதையில் (GTO) வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து இஸ்ரோவின் கட்டுப்பாட்டு அறையில் விஞ்ஞானிகள் மகிழ்ச்சியை கொண்டாடினர்.

இஸ்ரோ தலைவர் நாராயணன் மற்றும் குழுவினர் ஒருவருக்கொருவர் வாழ்த்துகள் தெரிவித்தனர்.இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது: “எல்.வி.எம்.3 என்பது இஸ்ரோவின் சக்தி வாய்ந்த கனரக ராக்கெட். இது தொடர்ந்து 7 வெற்றிகரமான பணிகளை நிறைவேற்றியுள்ளது. சி.எம்.எஸ்-03 செயற்கைக்கோள் இந்தியாவில் இதுவரை ஏவப்பட்ட மிக அதிக எடை கொண்ட தகவல் தொடர்பு செயற்கைக்கோளாகும்,” என தெரிவித்தனர்.இந்த செயற்கைக்கோள் இந்தியாவின் கடல் பகுதிகளிலும், நிலப்பரப்பிலும், கடற்படை, கடலோர காவல், தொலைக்காட்சி, மருத்துவம், கல்வி, அவசர சேவைகள் ஆகிய துறைகளுக்கு உயர் திறன் கொண்ட டிஜிட்டல் தகவல் தொடர்பு சேவைகளை வழங்கும். மேலும், இது டிஜிட்டல் இந்தியா, அவசர தொடர்பு, மற்றும் நீல பொருளாதாரம் (Blue Economy) வளர்ச்சிக்கும் துணைபுரிகிறது. மொத்தத்தில், சி.எம்.எஸ்-03 செயற்கைக்கோள் இந்தியாவின் தகவல் தொடர்பு துறையில் தன்னிறைவை நோக்கி எடுத்த ஒரு மிகப் பெரிய முன்னேற்றமான அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *