முதல்முறை வங்கிகடன் பெறுபவருக்கு சிபில் ஸ்கோரை காரணமாகக் கொண்டு கடன் மறுக்க முடியாது என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். CIBIL ஸ்கோர் என்பது ஒரு நபரின் கடன் வரலாற்றை குறிக்கும், 300 முதல் 900 வரை உள்ள 3 இலக்க எண்ணாகும்.CIBIL ஸ்கோர் அதிகமாக இருந்தால் நல்ல நிதி நிர்வாகத்தையும், குறைவாக இருந்தால் மோசமான நிதி நெருக்கடியில் இருப்பதையும் குறிக்கிறது. கடனை சரியான நேரத்தில் திருப்பி செலுத்தாத காரணங்களால் சிபில் ஸ்கோர் குறைகிறது. வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் ஒரு நபருக்கு கடன் வழங்க அவரின் சிபில் ஸ்கோரை முக்கிய காரணமாகக் கருதுகின்றன.இந்நிலையில், முதல்முறை வங்கிகடன் பெறுபவர்களுக்கு அவர்களுக்கு பூஜ்ஜியம் அல்லது குறைந்த சிபில் ஸ்கோர் காரணமாக கடன் வழங்க மறுக்க கூடாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விளக்கமளித்த மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சௌத்ரி, “முதல்முறை கடன் பெறுபவருக்கு சிபில் ஸ்கோரை காரணம் காட்டி வங்கிக்கடன் மறுக்க கூடாது. கடன் விண்ணபங்களுக்கு குறைந்த பட்ச சிபில் ஸ்கோரை ரிசர்வ் வங்கி அறிவிக்கவில்லை. மேலும், கடன் தகவல் நிறுவனங்கள் தனிநபர்களுக்கு கடன் தகவல் அறிக்கையை வழங்க அதிகபட்சமாக ரூ.100 வரை வசூலிக்கலாம் என மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சௌத்ரி கூறினார்.

