எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நினைவாக நுங்கம்பாக்கம் காம்தார் நகர் பிரதான சாலைக்கு “எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சாலை” என பெயர் சூட்டப்பட்டது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சாலைப் பெயர் பலகையை திறந்து வைத்தார்.
பிரபல பின்னணி பாடகரான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கடந்த 2020-ம் ஆண்டு மாரடைப்பால் காலமானார். இவரது மறைவு இந்திய சினிமாவுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து, மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நினைவைப் போற்றும் வகையில், அவர் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள நுங்கம்பாக்கம், காம்தார் நகர் பிரதான சாலைக்கு “எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சாலை” எனப் பெயர் சூட்டப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “பல்வேறு மொழிகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி, தன்னுடைய அமுதக் குரலால் தமிழ் மக்களின் நெஞ்சங்களில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக இசை மழை பொழிந்ததோடு, பல படங்களுக்கு இசையமைத்தும், திரைப்படங்களில் நடித்தும், பல்துறை வித்தகராக விளங்கியவரும், மத்திய அரசின் பத்மஸ்ரீ, பத்மவிபூஷன் விருதுகள் பெற்றவரும், மறைந்த முதல்வர் கருணாநிதியின் அன்பிற்குரியவருமான எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கடந்த 25-9-2020 அன்று இதே நாளன்று நம்மை விட்டுப் பிரிந்தார். காலம் அவரைப் பிரித்தாலும், நம் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பெற்றவர் அவர்.
தமிழ்த் திரையுலகுக்கு அவர் ஆற்றிய சேவையைப் போற்றும் வகையிலும், அவரின் புகழுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையிலும், அவர் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள நுங்கம்பாக்கம் காம்தார் நகர் பிரதான சாலைக்கு, “எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சாலை” எனப் பெயரிடப்படும்,” எனத் தெரிவித்திருந்தார்.
அதன்படி, எஸ்.பி.பி. வாழ்ந்து வந்த இல்லம் அமைந்துள்ள நுங்கம்பாக்கம் காம்தார் நகர் பிரதான சாலைக்கு “எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சாலை” எனப் பெயர் மாற்றப்பட்டு இன்று சாலைப் பெயர் பலகை திறக்கப்பட்டது.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இந்த விழாவில் பங்கேற்று சாலைப் பெயர் பலகையை திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் எஸ்.பி.பி. குடும்பத்தினர், தமிழ்நாடு அமைச்சர்கள், சென்னை மேயர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

