தமிழகத்தில் அரசு அனுமதி இல்லாமலேயே திடீரென்று சினிமா தியேட்டர்களில் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
இதுநாள்வரையில் மல்டி பிளக்ஸ் தியேட்டர்களில் அதிகபட்ச கட்டணமாக 160 ரூபாய் வசூலிக்கப்பட்டது. அது 30 ரூபாய் உயர்த்தப்பட்டு இன்றிலிருந்து 190 ரூபாயாக வசூலிக்கப்படுகிறது.
சிங்கிள் ஸ்க்ரீன் தியேட்டர்களில் 130 ரூபாய்வரை வசூலிக்கப்பட்டு வந்தது. அது தற்போது 60 ரூபாய்வரை உயர்த்தப்பட்டு 190 ரூபாயாக வசூலிக்கப்படுகிறது.
இந்த திடீர் உயர்வுக்கு அரசாணை எதுவும் பிறப்பிக்கப்படவில்லை. ஆனால் தியேட்டர்காரர்களே கட்டணத்தை உயர்த்தியிருக்கிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது.
ஆனால் சில நாட்களுக்கு முன்புதான் தியேட்டர் உரிமையாளர்கள் டிக்கெட் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று கோரி தமிழக அரசிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில், “தற்போது மல்டி பிளக்ஸ், மால் மற்றும் தனி தியேட்டர்களில் மின்சார கட்டணம், ஊழியர்களுக்கான சம்பளம் உள்ளிட்டவை ஒரே வகையில் உள்ளன. எனவே அனைத்தும் தியேட்டர்களுக்கும் டிக்கெட் கட்டணத்தை ஒரேவிதமாக நிர்ணயித்து வழங்க வேண்டும். அதேபோல் பராமரிப்பு கட்டணத்தையும் உயர்த்தி தர வேண்டும்.
அதன்படி ஏசி வசதி கொண்ட தியேட்டர்களில் தற்போது வசூலிக்கப்படும் ரூ.4 கட்டணத்தை ரூ.10 எனவும், ஏசி அல்லாத தியேட்டர்களில் வசூலிக்கப்படும் ரூ.2 கட்டணத்தை ரூ.5 ஆகவும் உயர்த்தி தர வேண்டும்.
பெரிய தியேட்டர்களை சிறு தியேட்டர்களாக மாற்ற பொது பணித்துறை அலுவலகத்தில் உரிமம் பெற்றால் போதும் என்ற முறையை கொண்டு வர வேண்டும்.
ஆண்டுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்படும் C படிவ உரிமையை மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க அனுமதி வேண்டும்” என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியிருந்தனர்.
இந்தக் கோரிக்கைகளுக்கு அரசின் பதில் என்னவென்று தெரியாத சூழலிலேயே தியேட்டர் உரிமையாளர்கள் தாங்களாகவே டிக்கெட் கட்டணத்தை உயர்த்தியிருப்பது பொது மக்களுக்கு அதிருப்தியை தந்துள்ளது.
அதேசமயம் இவர்கள் கோரிக்கை நடைமுறைக்கு வரும் முன்பே பல தியேட்டர்களில் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு காட்சிகள் திரையிட அனுமதி வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு தியேட்டர்கள் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை வைத்திருந்தனர்.
அதை ஏற்று அக்., 21 முதல் 27 வரை சிறப்பு காட்சிகளை திரையிட அரசு அனுமதி அளித்துள்ளது.