மாசு இல்லா திருமலை – பிளாஸ்டிக் தடை, மின்சார வாகனங்கள் அறிமுகம்

ஆன்மீக தளங்கள் ஆன்மீகம் கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள் வரும் நிகழ்ச்சிகள்

ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் திருமலையில் பிளாஸ்டிக் பாட்டில்கள், பைகள், கேரி பேக்குகள், கவர்கள், ஷாம்பு பாட்டில்கள், ஷாம்பு பாக்கெட்டுகள் அல்லது எந்த வகையான பிளாஸ்டிக் பொருட்களையும் பயன்படுத்தவும் எடுத்துச் செல்லவும் முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. திருமலையில் தடையை மீறி பிளாஸ்டிக் பயன்படுத்துவோருக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருமலையில் இலவச பஸ்களுக்கு பதிலாக மின்சாரப் பஸ்களை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி கூறினார்.
திருமலையில் உள்ள அன்னமய பவனில் எலக்ட்ரா நிறுவனத்தின் பிரதிநிதிகள், அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள், திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:-
ஆந்திர முதல்-மந்திரி ஒய்.எஸ்.ஜெகன்மோகன்ரெட்டியின் அறிவுறுத்தலின்படி, திருமலையை மாசு இல்லாத புனித தலமாக மாற்ற ஏற்கனவே பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாகப் பிளாஸ்டிக் பாட்டில்கள், கவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக திருமலையில் பணிபுரியும் அதிகாரிகளுக்கு மின்சாரக் கார்கள் வழங்கப்பட்டுள்ளன. 2-வது கட்டமாக திருப்பதி-திருமலை இடையே மின்சாரப் பஸ்கள் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதற்கு பக்தர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
2-வது கட்டமாக திருமலையில் பக்தர்களுக்காக டீசலில் இயக்கப்பட்டு வந்த 16 இலவச பஸ்களுக்கு (தர்ம ரதங்கள்) பதிலாக மின்சாரப் பஸ்களை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதன் ஒரு பகுதியாக எலக்ட்ரா நிறுவனத்தின் தலைவர் கிருஷ்ணாரெட்டி ரூ.15 கோடி மதிப்பில் 10 மின்சாரப் பஸ்களை வழங்க முன்வருவது மகிழ்ச்சியளிக்கிறது.
மின்சாரப் பஸ்களை வடிவமைத்தல் மற்றும் நிர்வகித்தல் தொடர்பாக ஆலோசிக்கவே இந்தக் கூட்டம் நடந்தது. பக்தர்களுக்கு வசதியாக மின்சாரப் பஸ்களை வடிவமைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
3-வது கட்டமாக திருமலையில் இயங்கும் டாக்சிகள் மற்றும் பிற வாடகை வாகனங்களுக்காக, வங்கிக்கடன்களை வழங்கி திருமலை-திருப்பதி தேவஸ்தான ஒத்துழைப்போடு மின்சார வாகனங்களாக மாற்றப்படும்.

Leave a Reply

Your email address will not be published.