கோவை, சித்தாபுதூர் பகுதியில் உள்ள பா.ஜ.க அலுவலகம்மீது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசிச் சென்றனர். அதே போல ஒப்பணக்கார வீதியில் உள்ள மாருதி என்ற துணிக்கடைமீதும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
அவரது காரையும் சேதப்படுத்தியிருக்கின்றனர். மேலும், இந்து முன்னணியைச் சேர்ந்த சரவணக்குமார் என்பவர் ஆட்டோவையும் சேதப்படுத்தியிருக்கின்றனர். தொடர்ந்து குமரன் நகர்ப் பகுதியைச் சேர்ந்த பொன்ராஜ் என்ற பா.ஜ.க பிரமுகர் காரையும் உடைத்து சேதப்படுத்தினர்.
இதையடுத்து 100 சாலையில் அமைந்திருக்கும் பா.ஜ.க ரத்தினபுரி மண்டலத் தலைவர் மோகன்குமார் அலுவலகத்திலும் மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசியிருக்கின்றனர். நேற்று நள்ளிரவு மேட்டுப்பாளையம் பகுதியில் மதன்குமார், சச்சின் ஆகியோருக்குச் சொந்தமான பிளைவுட் கடைகளின் ஜன்னல்களை உடைத்து, மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியிருக்கின்றனர்.
இந்தச் சம்பவங்கள் தொடர்பான சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், போலீஸார் தனித்தனியாக வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுபோன்ற அடுத்தடுத்த சம்பவங்களால், கோவை மாவட்டம் முழுவதும் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. கோவை மாநகரில் மட்டும் நான்கு கம்பெனி தமிழ்நாடு சிறப்புக் காவல்படையினர் (ஒரு படைக்கு 100 பேர்) பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருக்கின்றனர்.