மத்திய அந்தமான் கடல் பகுதியில் உருவான மேலடுக்கு காற்று சுழற்சி அதே இடத்தில் நீடிப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அதற்கு மறுநாள் புயலாகவும் வலுப்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் அக்டோபர் 24 ஆம் தேதி ஒடிசா, மேற்குவங்கம் கடற்கரை பகுதிகளை நோக்கி நகரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நடப்பு பருவமழை காலத்தில் உருவாகும் இந்த புயலுக்கு கத்தார் பரிந்துரைத்த ‘டானா’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் தமிழக பகுதிகளை விட்டு விலகிச் செல்வதால் தமிழ்நாட்டிற்கு பெரிய அளவில் மழைப் பொழிவு இருக்காது.
வடதமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதன் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரியில் ஏழு நாட்களுக்கு இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, சேலம் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, கள்ளக்குறிச்சி, நாமக்கல், பெரம்பலூர், திருச்சி, அரியலூர், கரூர், புதுக்கோட்டை மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் காரைக்காலிலும் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் உட்பட 13 மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

