இந்தியன் 2 படத்தின் அறிமுக வீடியோ தமிழ் , தெலுங்கு , மலையாளம் , கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியானது.
இயக்குநர் ஷங்கர் உடன் கமல்ஹாசன் இரண்டாம் முறையாக இணைந்த திரைப்படம் ‘இந்தியன் 2’. 1996ஆம் ஆண்டு வெளியான இப்படத்தின் முதல் பாகம் பாக்ஸ் ஆஃபிஸில் சக்கை போடு போட்டதுடன், வசூலையும் குவித்து தமிழ் சினிமாவின் பிரபல கமர்ஷியல் படமாக உருவெடுத்தது. கமல்ஹாசன் இப்படத்துக்காக தேசிய விருது வென்றார்.
இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாக பணிகள் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் முதல் பாகத்தை விட இன்னும் பிரம்மாண்டமாகவும் பெரும் நட்சத்திரப் பட்டாளத்துடனும் படம் வெளியாக உள்ளது.
இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், படக்குழு முழு வீச்சில் பணியாற்றி வருகிறது. அந்த வகையில் இந்தியன் 2 படத்தின் இண்ட்ரோ வீடியோ இன்று வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இந்த வீடியோவை இந்திய சினிமாவின் மற்றொரு உச்ச நட்சத்திரமும் கமல்ஹாசனின் நெருங்கிய நண்பருமான ரஜினிகாந்த் வெளியிடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி இந்தியன் 2 படத்தின் இண்ட்ரோ வீடியோ வெளியானது. இந்தியன் – 2 தமிழ் அறிமுக விடியோவை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டார். அதேபோல் மலையாளத்தில் மோகன் லால், தெலுங்கில் எஸ்.எஸ்.ராஜமெளலி, கன்னடத்தில் கிச்சா சுதீப், ஹிந்தியில் அமீர் கான் ஆகியோரும் வெளியிட்டுள்ளனர்.
இந்த இண்ட்ரோவில் சித்தார்த், எஸ்.ஜே.சூர்யா , பிரியா பவானி சங்கர், ரகுல் பிரீத் சிங், மறைந்த மனோபாலா, விவேக் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். கொரானோ காலத்தில் விளக்கு ஏற்றுவது, பாத்திரங்களை அடித்து ஓசை எழுப்புவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இறுதியாக கமல்ஹாசன் பேசும் வசனத்தோடு நிறைவு பெறுகிறது, அதில் “ வணக்கம் இந்தியா, Indian is Comeback ” என இந்த காட்சி நிறைவு பெறும்.