ராமேசுவரத்தில் அமைந்துள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் தேசிய நினைவகத்தை இதுவரை 2 கோடிக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளதாக டிஆர்டிஓ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.2015 ஜூலை 27-ஆம் தேதி ஷில்லாங்கில் உரையாற்றியபோது உயிரிழந்த அப்துல் கலாம், தனது சொந்த ஊரான ராமேசுவரம் பேக்கரும்பில் அடக்கம் செய்யப்பட்டார். அவரது நினைவாக டிஆர்டிஓ சார்பில் தேசிய நினைவகம் அமைக்கப்பட்டு, 2017 ஜூலை 27-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.இந்த நினைவகத்தில் கலாம் பயன்படுத்திய பொருட்கள், புத்தகங்கள், உடைகள், அரிய புகைப்படங்கள், ஓவியங்கள் மற்றும் அவரது வாழ்க்கைப் பயணத்தை வெளிப்படுத்தும் பல்வேறு காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும், விஞ்ஞானி, குடியரசுத் தலைவர் மற்றும் மாணவர்களின் வழிகாட்டி என கலாமின் பல்வேறு பரிமாணங்களையும் பிரதிபலிக்கும் சிறப்பு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.கொரோனா ஊரடங்கு காரணமாக 525 நாட்கள் மூடப்பட்டிருந்த நினைவகம், 2021 ஆகஸ்ட் 24-ஆம் தேதி மீண்டும் திறக்கப்பட்டது. தற்போது 3,237 நாட்களில் 2 கோடி பார்வையாளர்கள் என்ற முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது.இந்த சாதனையை முன்னிட்டு டிஆர்டிஓ அதிகாரிகள் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். கலாமின் பேரன் ஷேக் சலிம் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். மேலும், 2 கோடி பார்வையாளர்கள் எண்ணிக்கையை கடந்த நேரத்தில் வந்தவர்களுக்கு நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன.

