லஞ்சம் பெற்றதாக அமலாக்கத்துறை அதிகாரி கைது; தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை

அரசியல் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவர் சுரேஷ் பாபு, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பான விசாரணையை அமலாக்கத்துறை கையிலெடுத்தது. அப்போது, மதுரையில் இருந்து அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி, மருத்துவர் சுரேஷ் பாபுவை தொடர்புகொண்டார். இந்த வழக்கில் இருந்து உங்களை விடுவிக்க வேண்டும் என்றால் ரூ.5 கோடி தர வேண்டும் என பேரம் பேசினார். அதற்கு மருத்துவர் மறுப்பு தெரிவிக்கவே, ரூ.51 லட்சததுக்கு இறங்கி வந்தார் அங்கித் திவாரி.
அதன்படி முதல் தவணையாக கடந்த மாதம் ரூ.20 லட்சத்தை மருத்துவர் சுரேஷ் பாபு கொடுத்தார். தொடர்ந்து, மீதி பணத்தையும் கேட்டு தொந்தரவு செய்ததால் வேறு வழியின்றி லஞ்ச ஒழிப்புத் துறையை நாடினார். இதனைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி, ரசாயனம் தடவிய நோட்டுகளை அங்கித் திவாரியிடம் சுரேஷ் பாபு கொடுத்தார். திண்டுக்கல் தோமையார்புரம் அருகே பணத்தை வாங்கிக் கொண்டு காரில் புறப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரியை லஞ்ச ஒழிப்புத் துறையினர் பின்தொடர்ந்தனர். அப்போது, கொடைக்கானல் சாலை சுங்கச்சாவடியில் வைத்து அவரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
இதையடுத்து, அங்கித் திவாரி பணிபுரியும் மதுரை அமலாக்கத்துறை துணை மண்டல அலுவலகத்தில் சோதனை மேற்கொள்ள லஞ்ச ஒழிப்புத்துறையினர் அங்கு சென்றனர். ஆனால், சோதனைக்காக சென்ற லஞ்ச ஓழிப்புத்துறை அதிகாரிகளை உள்ளே அனுமதிக்க அமலாக்கத்துறையினர் மறுத்தனர். இதையடுத்து, அவர் லஞ்சம் பெற்றதற்கான ஆவணங்களை முன்வைத்தனர்.
அத்துடன், அங்கித் திவாரியின் அறையில் மட்டும் சோதனை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் அனுமதி கேட்டனர். வேறு வழியின்றி அமலாக்கத்துறையினர் அனுமதி வழங்கியதை தொடர்ந்து அங்கித் திவாரி அறையில் சோதனை படலம் தொடங்கியது. அப்போது, அங்கித் திவாரி பயன்படுத்திய லேப்டாப் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டன. மேலும், அந்த அறையில் இருந்து முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றியதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
மதுரையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடைபெற்ற சோதனையை தொடர்ந்து, அங்கித் திவாரி, திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை என இரண்டு அதிகார மையங்கள் இடையே ஏற்பட்ட திடீர் உரசலால் மதுரையில் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *