6 ஆம் கட்ட மக்களவை தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்தது. நாடு முழுவதும் ஏப். 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடக்கிறது. இதுவரை 5 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் 6ம் கட்டமாக 7 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தை சேர்ந்த 58 தொகுதிகளில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஒடிசாவில் மக்களவை தேர்தலுடன் மாநில சட்டமன்றத்துக்கும் தேர்தல் நடப்பதால், அங்கு 43 சட்டமன்ற தொகுதியில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறும். யூனியன் பிரதேசமான ஜம்மு-காஷ்மீரில் அனந்த்நாக் ரஜோரி தொகுதியில் 3ம் கட்டத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருந்தது.ஆனால் மோசமான வானிலை காரணமாக வாக்குப்பதிவு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறும். மேற்கண்ட 58 தொகுதிகளில், 889 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களுடன் அனந்த்நாக்-ரஜோரி தொகுதியை சேர்ந்த 20 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது. இதனால் கட்சி தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் இறுதிகட்ட பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதே நேரத்தில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடப்பதால் அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது. 6ம் கட்டம் முடிந்தவுடன் வரும் ஜூன் 1ம் தேதி 7ம் கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது.

