“நாளை மறுநாள் காலை வங்கக்கடலில் ரிமல் புயல் உருவாக வாய்ப்புள்ளதாகவும், மே 26 ஆம் தேதி மாலை தீவிர புயலாக கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடலில் நேற்று உருவாகிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடகிழக்கு நோக்கி நகர்ந்து இன்று காலை 8.30 மணி அளவில் மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய தெற்கு வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது.
இது தொடர்ந்து வடகிழக்கு நோக்கி நகர்ந்து நாளை காலை மத்திய வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறவுள்ளது.
அதன்பிறகு, இது தொடர்ந்து வடகிழக்கு நோக்கி நகர்ந்து, மேலும் தீவிரமடைந்து மத்திய கிழக்கு வங்க கடலில் வரும் 25 ஆம் தேதி காலை புயலாக மாற வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து வடக்கு நோக்கி நகர்ந்து வங்காளதேசம் மற்றும் அதை ஒட்டிய மேற்கு வங்கக் கடற்கரையை மே 26 மாலைக்குள் தீவிரப்புயலாக கரையைக் கடக்கும் எனவும் கணித்துள்ளது.
தென்னிந்திய பெருங்கடலில் உருவாகும் புயலுக்கு பெயரிடும் முறைப்படி இந்த முறை ஓமன் நாடு பரிந்துரைத்த ரிமல் என்ற பெயர் இந்த புயலுக்கு வைக்கப்பட உள்ளது.

