துபாயில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி சாம்பியன்ஸ் கோப்பை தொடரை இந்திய அணி 3 ஆவது முறையாக வென்று சாதனை படைத்துள்ளது. அதிக முறை சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற அணி என்ற பெருமையையும் ஏற்படுத்தியுள்ளது இந்திய அணி.
துபாய் மற்றும் பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வந்தது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டித் தொடரில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. துபாயில் இன்று நடைபெற்ற இறுதி போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்கத்தில் அதிரடியாக நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் விளையாடினாலும் இந்திய அணியின் ஸ்பின்னர்கள் ரன் குவிப்பை கட்டுப்படுத்தினர். தொடக்க வீரர் வில் யங் 15 ரன்களும், ரச்சின் ரவிந்திரா 37 ரன்களும் எடுத்தனர்.
டேரில் மிட்செல் 101 பந்துகளில் 63 ரன்கள் சேர்க்க, கடைசி ஓவர்களில் அதிரடியாக விளையாடிய பிரேஸ்வெல் 40 பந்துகளில் 2 சிக்சர், 3 பவுண்டரியுடன் 53 ரன்கள் எடுத்தார். 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த நியூசிலாந்து அணி 251 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 252 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா – சுப்மன் கில் இணை வலுவான தொடக்கத்தை கொடுத்தது. இருவரும் முதல் விக்கெட்டிற்கு 105 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். சுப்மன் கில் 31 ரன்களில் வெளியேற அடுத்த சில நிமிடங்களில் விராட் கோலி 1 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ரோஹித் சர்மா 76 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்க, இந்திய அணி 26.1 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் எடுத்திருந்தது.
இதன்பின்னர் இணைந்த ஷ்ரேயாஸ் ஐயர் – அக்சர் படேல் இணை பொறுப்பாக விளையாடி ரன்களை சேர்த்தது. இருவரும் 4 ஆவது விக்கெட்டிற்கு முக்கியமான 61 ரன்களை பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஷ்ரேயாஸ் 48 ரன்களும், அக்சர் படேல் 29 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
ஹர்திக் பாண்ட்யா 18 ரன்களில் ஆட்டமிழக்க இந்திய அணி 49 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 254 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கே.எல். ராகுல் 33 ரன்களும், ரவிந்திர ஜடேஜா 4 ரன்களும் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தனர்.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி சாம்பியன்ஸ் கோப்பை தொடரை 3 ஆவது முறையாக வென்றுள்ளது. முன்னதாக 2002 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் நடந்த சாம்பியன்ஸ் கோப்பையை இந்திய அணி வென்றிருந்தது.
