தூத்துக்குடியில் பிரதமர் நரேந்திர மோடியை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் மோடி இரு நாள் பயணமாக வரும் 26ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு வரவிருக்கிறார். ஜூலை 26 ஆம் தேதி இரவு 7.50 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையத்திற்கு பிரதமர் மோடி வருகிறார். அதனைத் தொடர்ந்து, இரவு 8.30 – 9.30 மணிக்கு விமான நிலைய புதிய முனைய திறப்பு விழாவில் பங்கேற்று, தூத்துக்குடி புது விமான முனையத்தை நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார்.
பின்னர் இரவு 9.40 மணிக்கு தூத்துக்குடியிலிருந்து விமானம் மூலம் திருச்சி செல்லும் பிரதமர் 26 ஆம் தேதி இரவு திருச்சியில் தங்கவுள்ளார்.
ஜூலை 27ஆம் தேதி திருச்சி ஹெலிபேடில் இருந்து புறப்படும் பிரதமர் மோடி, பகல் 12 மணிக்கு கங்கைகொண்ட சோழபுரம் செல்கிறார். அதன்பின் அங்கு கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் வழிபாடு நடத்துகிறார். மேலும், ராஜேந்திர சோழனின் நினைவு நாணயத்தையும் வெளியிடவுள்ளார். அதன்பிறகு பகல் 2.25 மணிக்கு திருச்சி விமான நிலையத்தில் இருந்து புறப்படுகிறார்.
இதற்கிடையில், 26ஆம் தேதி தூத்துக்குடி வரும் பிரதமர் நரேந்திர மோடியை அதிமுக பொதுச் செயலாளர் அன்றைய தினம் அவரைச் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக எடப்பாடி பழனிசாமியின் 26ஆம் தேதி தேர்தல் பரப்புரை 29ஆம் தேதிக்கு மாற்றப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தால், அதிமுக – பாஜக கூட்டணி அமைந்த பிறகு இருவரும் சந்திக்கும் முதல் சந்திப்பாக இது அமையும்.

