இஸ்ரேலும் ஹமாஸும் இடையே இரண்டு வருடமாக நடந்த போர், கடந்த வாரம் எகிப்தின் ஷர்ம் எல் ஷேக்கில் நடைபெற்ற மாநாட்டில் உலக தலைவர்கள் மற்றும் அமெரிக்கா அதிபர் டிரம்ப் பங்கேற்று அமைதி ஒப்பந்தம் செய்யப்பட்டு போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதன் பின்னர் ஹமாஸ் பல பணய கைதிகளை விடுதலை செய்துள்ளது.இஸ்ரேல் தகவல்படி, ஹமாஸ் கடந்த சில நாட்களாக ஒப்படைத்த கைதிகளில் ஒருவரின் உடல் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த பணய கைதியின் பெயர் தல் ஹைமி (வயது 42). 2023 அக்டோபர் 7-ஆம் தேதி காசா எல்லையில் தல் ஹைமியை கொன்று, அவரது உடலை ஹமாஸ் படையினர் காசாவுக்குக் கொண்டு சென்றனர். இதுவரை ஹமாஸ் 13 உடல்களை ஒப்படைத்துள்ளது, ஆனால் இன்னும் 15 உடல்கள் அவர்கள் பிடியில் உள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. மீண்டும் நேற்று முன்தினம் ஹமாஸ் படையினர் இஸ்ரேல் ராணுவத்தின் மீது துப்பாக்கிசூடு நடத்தியதில் 2 இஸ்ரேல் வீரர்கள் கொல்லப்பட்டனர். பதிலுக்கு இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காசா சுகாதார அமைச்சகம் தெரிவிப்பதாவது 45 பாலஸ்தீனர்கள் பலி அடைந்தனர். போர் நிறுத்தம் பிறகும், இஸ்ரேல் தாக்குதல்களில் இதுவரை 80 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர். போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இரு தரப்பினரும் தாக்குதல் மேற்கொண்டதன் பின்னர், ஒப்பந்தம் சரிவர செயல்படுவதை கண்காணிக்கவும், இஸ்ரேல் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் நேற்று டெல் அவிவ் சென்றடைந்தார்.

