ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் 22 ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், சென்னையில் நடைபெறும் சிஎஸ்கே மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான மேட்ச்சின் டிக்கெட் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் 22ஆம் தேதி சனிக்கிழமை அன்று தொடங்க உள்ளது. கொல்கத்தா இடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில் நடப்புச் சாம்பியன் கொல்கத்தா அணி பெங்களூரை எதிர்கொள்கிறது. நடப்பு சீசனில் இந்த இரு அணிகளின் கேப்டன்கள் மாற்றப்பட்டுள்ளனர்.
கொல்கத்தா அணியின் கேப்டனாக அனுபவ வீரர் ரஹானேவும், ஆர்.சி.பி அணியின் கேப்டனாக ரஜத் பட்டிதாரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து மறுநாள் ஞாயிறு அன்று நடைபெற உள்ள 2 போட்டிகளில் ஒரு போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கத்தில் இந்த போட்டி இரவு 7:30 மணிக்கு ஆரம்பமாகிறது.
இரு அணிகளும் சம பலம் வாய்ந்தது என்பதால் இந்த போட்டி ரசிகர்களுக்கு விருந்தாக அமையும். இந்த நிலையில், சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் மார்ச் 19 புதன் அன்று விற்பனையாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 10:15 மணிக்கு டிக்கெட்டுகளை www.chennaisuperkings.com என்ற தளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அத்துடன் சென்னை சூப்பர் கிங்ஸ் இணையதளத்தில் நடைபெறும் குவிஸ் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுபவருக்கு சென்னை அணி விளையாடும் போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை வெல்ல வாய்ப்புகள் உள்ளன. டிக்கெட் பெற்றவர்கள் அதில் குறிப்பிட்ட நுழைவாயில் வழியாகத்தான் வரவேண்டும் என்றும், நபர் ஒருவருக்கு 2 டிக்கெட் மட்டுமே அதிகபட்சமாக வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது
டிக்கெட்டுகளை www.chennaisuperkings.com என்ற இணைய தளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். முன்பதிவு 19.03.2025 புதன் அன்று காலை 10.15 மணிக்கு தொடங்கவுள்ளது.

