இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாக நடைபெற்று வந்த போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஹமாஸ் இஸ்ரேலிய பணயக் கைதிகளை விடுவிக்க ஒப்புக்கொண்டுள்ளது. இந்நிலையில் இஸ்ரேல் தனது சிறைகளில் உள்ள பாலஸ்தீன கைதிகளை விடுவிக்க ஒப்புக்கொண்டுள்ளது. போர் நிறுத்தத்தின் முதல் கட்டமாக, ஹமாஸ் 6 வாரங்களுக்குள் 33 பணயக்கைதிகளை விடுவிக்க ஒப்புக்கொண்டுள்ளது. 33 இஸ்ரேலிய கைதிகளுக்கு எதிராக, இஸ்ரேல் தனது சிறைகளில் உள்ள 1,904 பாலஸ்தீனியர்களை விடுவிக்க முடிவு செய்துள்ளது. 6 வாரங்கள் நீடித்த போர் நிறுத்தத்தின் போது, ஹமாஸ் 16 இஸ்ரேலிய கைதிகளை விடுவித்துள்ளது. இதற்கான பதிலாக, இஸ்ரேல் 480 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியரை விடுவித்துள்ளது.
இதற்கிடையில், இஸ்ரேல் காசா பகுதியில் கூடாரங்கள் மற்றும் தங்குமிடங்களை அனுமதிக்கவில்லை என்றும், போர் நிறுத்தத்தை மீறுவதாகவும் குற்றம் சாட்டி, இஸ்ரேலிய கைதிகளை விடுவிப்பதில் தாமதம் ஏற்படுவதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்பின் ஆதரவுடன், இஸ்ரேல், பணயக்கைதிகள் விடுவிக்கப்படாவிட்டால் மீண்டும் தாக்குதலை தொடங்குவதாக அச்சுறுத்தியுள்ளது. இந்நிலையில், ஹமாஸ் திட்டமிட்டபடி மேலும் இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கமைய, சனிக்கிழமை 3 இஸ்ரேலிய பணயக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என ஹமாஸ் தெரிவித்துள்ளது. இதற்கான தகவலுக்கு இஸ்ரேல் தரப்பில் இதுவரை எந்தவொரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. ஹமாஸின் இந்த அறிவிப்பு காசாவில் போர் நிறுத்தத்தை பாதிக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

