புது சரித்திரம் படைத்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணி; தென்னாபிரிக்கா அணியை வீழ்த்தி உலகக் கோப்பையை வென்றது இந்தியா

ஆப்ரிக்க நாடுகள் இந்தியா உலகம் கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள் பெண்கள் மற்றவை முதன்மை செய்தி விளையாட்டு

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கை நாடுகளில் நடைபெற்றது. இறுதிப் போட்டிக்கு இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் தகுதி பெற்றன. இந்நிலையில் இறுதிப் போட்டி நவி மும்பை டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
மழை குறுக்கிட்டதன் காரணமாக 3 மணிக்கு தொடங்க வேண்டிய ஆட்டம் 5 மணிக்கு ஆரம்பித்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் லோரா வோல்வாரட் பவுலிங்கை தேர்வு செய்தார்.
இதையடுத்து களம் இறங்கிய இந்திய அணியில் ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷெபாலி வர்மா சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். முதல் விக்கெட்டிற்கு இருவரும் 104 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் ஸ்மிருதி மந்தனா 45 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ஷெபாலி வர்மா 87 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்து வெளியேறினார்.
ஜெமிமா ரோட்ரிகஸ் 24 ரன்களும், கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 20 ரன்களும், தீப்தி சர்மா 58 ரன்களும் சேர்த்தனர். விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் 34 ரன்கள் சேர்க்க 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 298 ரன்கள் குவித்தது. இதையடுத்து 299 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தென்னாப்பிரிக்க அணியின் பேட்டர்கள் களம் இறங்கினர்.
முதல் விக்கெட்டிற்கு அந்த அணியின் பேட்டர்கள் கேப்டன் லாரா வால்வார்ட் – தஸ்மின் 51 ரன்கள் சேர்த்து நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். தஸ்னிம் 23 ரன்களில் வெளியேற, அதன்பின்னர் தென்னாப்பிரிக்காவின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் அடுத்தடுத்து விழத் தொடங்கியது.
சன் லூஸ் 25 ரன்களும், ஆன்ரி டெர்க்சென் 35 ரன்களும் சேர்த்தனர். விக்கெட்டுகள் ஒருபக்கம் விழுந்தாலும், கேப்டன் லாரா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்தார்.
45.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த தென்னாப்பிரிக்க அணி 246 ரன்கள் மட்டுமே எடுத்து 52 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்திய அணியில் தீப்தி சர்மா 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அணியின் வெற்றிக்கு உதவினார்.
உலகக்கோப்பையை வென்றுள்ள இந்திய அணிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *